உலக செய்திகள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வடகொரியா அடாவடி - முதல் நீர்மூழ்கி ஏவுகணையை சோதித்தது தென்கொரியா + "||" + North Korea tests intercontinental ballistic missiles

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வடகொரியா அடாவடி - முதல் நீர்மூழ்கி ஏவுகணையை சோதித்தது தென்கொரியா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வடகொரியா அடாவடி - முதல் நீர்மூழ்கி ஏவுகணையை சோதித்தது தென்கொரியா
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்தது.‌ அதேவேளையில் தென்கொரியா தனது முதல் நீர்மூழ்கி ஏவுகணையை சோதித்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.
பியாங்யாங்,

ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறியும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் சோதித்து உலகை அதிரவைத்து வந்தது.

இந்த விவகாரத்தில் வடகொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக ‌ மாற்ற வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா வட கொரியாவுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இதனால் வடகொரியா அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த வார இறுதியில் புதிய தொலை தூர ஏவுகணையை அடுத்தடுத்து 2 முறை சோதித்ததாக வடகொரியா தெரிவித்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை அண்டை நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக கூறி அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

ஜப்பான் வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை செய்த இரண்டே நாட்களில் வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து உலகை அதிர வைத்துள்ளது.

வடகொரியாவின் மத்திய பகுதியில் இருந்து ஜப்பான் கடலை நோக்கி ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் சுமார் 60 கி.மீ. உயரத்தில் 800 கி.மீ. தொலைவு வரை பறந்து சென்றதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

.மேலும் இந்த ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடையில் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்தது.

எனினும் இந்த ஏவுகணை சோதனையால் அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் உடனடியாக எந்த அச்சுறுத்தலும் இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது.

அதேவேளையில் வடகொரியாவை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்தது பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் மூர்க்கத்தனமான செயல் என ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் எந்த ஒரு பதில் நடவடிக்கைக்கும் முழுமையாக தயார் நிலையில் இருப்பதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.

இதனிடையே வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்ததாக தகவல் வெளியான சில மணி நேரத்துக்கு பின் தென்கொரியா தனது முதல் நீர்மூழ்கி ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது.‌

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி ஏவுகணையின் சோதனை நேற்று‌ பிற்பகல் நடந்ததாகவும் இதை அதிபர் மூன் ஜே இன் நேரில் பார்வையிட்டதாகவும் தென்கொரிய அரசு தெரிவித்தது. 3 ஆயிரம் டன் எடையுள்ள நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.