உலக செய்திகள்

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவின் புதிய முத்தரப்பு பாதுகாப்பு கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு + "||" + Strong opposition to the new tripartite security alliance of the United States, the United Kingdom and Australia

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவின் புதிய முத்தரப்பு பாதுகாப்பு கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவின் புதிய முத்தரப்பு பாதுகாப்பு கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ள புதிய முத்தரப்பு பாதுகாப்பு கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாரீஸ்,

இந்தோ பசிபிக் பிராந்தியத்துக்காக புதிய பாதுகாப்பு கூட்டணியை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தொடங்கியுள்ளன.

இந்த புதிய முத்தரப்பு பாதுகாப்பு கூட்டணி ‘ஆக்கஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு மற்றும் ராணுவ பரவல் அதிகரித்து வரும் நிலையில் தங்களது நலன்களைப் பாதுகாக்க இந்தக் கூட்டணியை அமைத்துள்ளதாக அந்த நாடுகள் கூறுகின்றன.

அதேசமயம் இந்தப் பாதுகாப்பு கூட்டணி சீனா உட்பட எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல என அந்த நாடுகள் அறிவித்துள்ளன.

உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, குவாண்டம் தொழில்நுட்பம், குரூஸ் ரக ஏவுகணைகளை வழங்குவது என பல்வேறு அம்சங்களை இந்த புதிய பாதுகாப்பு கூட்டணி கொண்டுள்ளது.

எனினும் அவற்றுக்கெல்லாம் மேலாக ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை வழங்குவதே இந்த பாதுகாப்பு கூட்டணியின் முதன்மையான நோக்கமாகும்.

அந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் கட்டப்பட உள்ளன. அவற்றைக் கட்டுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனையை அமெரிக்காவும், இங்கிலாந்தும் வழங்க இருக்கின்றன.

“ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் பிரமாண்டமான பாதுகாப்புத் திறன்களைக் கொண்டுள்ளது. எனவே பிராந்திய சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். உலகில் 6 நாடுகள் மட்டுமே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளன. அவை அணு ஆயுதங்கள் அற்ற மிகவும் சக்திவாய்ந்த தடுப்பு ஆயுதம்” என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் மைக்கேல் ஷூபிரிட்ஜ் கூறுகிறார்.

இந்தப் புதிய பாதுகாப்பு கூட்டணி சீனாவுக்கு எதிரான அல்ல என அந்த நாடுகள் கூறினாலும், அதனை ஏற்க மறுக்கும் சீனா இந்த பாதுகாப்பு கூட்டணியை கடுமையாக எதிர்க்கிறது.

ஆக்கஸ் கூட்டணி பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கடுமையாக குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது என்றும் இது ஆயுத போட்டியை உருவாக்கும் என்றும் சீனா விமர்சித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் கசப்பான உறவை கொண்டிருக்கும் சீனா மட்டுமல்லாமல், அந்த நாடுகளுக்கு நெருங்கிய நட்பு நாடாக விளங்கும் பிரான்சும் ‘ஆக்கஸ்’ கூட்டணி குறித்து கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அதே போல் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய கூட்டமைப்பும் இந்தப் புதிய முத்தரப்பு கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் இந்தக் கூட்டணி மீது அதிருப்தி தெரிவிப்பதற்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கி வரும் நிலையில், முக்கிய பிரச்சினையில் தனியாக செல்லும் அணுகுமுறையின் மூலம் அமெரிக்கா தங்களை அந்நியப்படுத்தியதாக பிரான்ஸ் கருதுகிறது.

மற்றொரு முக்கிய காரணம் இந்தப் புதிய கூட்டணி காரணமாக, அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை வாங்க பிரான்ஸ் நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை முதுகில் குத்தும் செயல் என்றும் ஆஸ்திரேலியா தங்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் பிரான்ஸ் வேதனை தெரிவித்துள்ளது.

அதேபோல் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற 3 மாதங்களுக்குப் பிறகு ஐரோப்பா சென்ற ஜோ பைடன் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் ஆட்சியில் ஐரோப்பிய நாடுகளுடன் உடைந்த உறவுகளை சரி செய்வேன் என்றும் அமெரிக்கா மீதான நம்பகத்தன்மையை மீட்டெடுப்பேன் என்றும் ஐரோப்பிய தலைவர்களிடம் உறுதி அளித்தார்.

ஆனால் தற்போது புதிய பாதுகாப்பு கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் ஐரோப்பாவுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்ததன் மூலம் ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் கொள்கைக்கு திரும்பியுள்ளதாக ஐரோப்பிய கூட்டமைப்பு விமர்சனம் செய்துள்ளது.