காபூலில் வான்வெளி தாக்குதலில் உயிரிழந்த 10 பேரும் அப்பாவி பொதுமக்கள்: மன்னிப்புகோரிய அமெரிக்கா


காபூலில் வான்வெளி தாக்குதலில் உயிரிழந்த 10 பேரும் அப்பாவி பொதுமக்கள்: மன்னிப்புகோரிய அமெரிக்கா
x
தினத்தந்தி 18 Sep 2021 1:59 AM GMT (Updated: 18 Sep 2021 2:07 AM GMT)

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையம் அருகே கடந்த 29-ம் தேதி அமெரிக்க படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தியது.

காபூல்,

ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15-ம் தேதி தலீபான்கள் கைப்பற்றியது. இதையடுத்து, அங்கு சிக்கி இருந்த தங்கள் நாட்டு மக்களையும், ஆப்கானிஸ்தான் மக்களையும் கடந்த 31-ம் தேதி வரை அமெரிக்கா மீட்டது. இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெற்றது.

இதற்கிடையில், இந்த மீட்பு பணிகள் நடைபெற்றுகொண்டிருந்த போது கடந்த 26-ம் தேதி மாலை 6 மணியளவில் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை காபூல் விமான நிலையத்தில் வெடிக்கச்செய்தார்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 169 ஆப்கானியர்கள் மற்றும் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 13 பேர் என மொத்தம் 182 பேர் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஹரசன் பிரிவு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 29-ம் தேதி காபூல் விமான நிலையம் அருகே அமெரிக்கா ’டிரோன்’ மூலம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காபூல் விமானநிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள் உள்பட 10  பேர் உயிரிழந்ததாக அமெரிக்கா தெரிவித்தது. 

ஆனால், காபூல் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் உள்ளூர்வாசிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், காபூல் விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 10 பேரும் அப்பாவி பொதுமக்கள் என அமெரிக்கா முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், பயங்கரவாதிகள் என நினைத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதாகவும், இது சோகமான தவறு என அமெரிக்கா தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. 

7 குழந்தைகள் உள்பட 10 ஆப்கானியர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தவறான தாக்குதலுக்கு அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாய்ட் அகஸ்டின் மன்னிப்புக்கோரியுள்ளார். 

Next Story