இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பாலஸ்தீன கைதிகளில் கடைசி 2 பேரும் கைது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 Sep 2021 10:01 PM GMT (Updated: 19 Sep 2021 10:01 PM GMT)

இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீன கைதிகளில் பிடிபடாமல் இருந்து மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெருசலேம், 

இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றான கில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்கள் 6 பேர் சிறை அறையில் உள்ள கழிவறை வழியாக சுரங்கம் தோண்டி தப்பிச்சென்றனர். கடந்த 6-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் இஸ்ரேலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பியோடியவர்களில் சிலர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் தெரிவித்தது.

இதற்கிடையில், தப்பியோடிய பாலஸ்தீன கைதிகள் மேற்கு கரையில் அமைந்துள்ள ஜெனின் பகுதியில் பதுங்கி இருக்கலாம் என தகவல் வெளியாகின. அந்த பகுதியில் உள்ள முகாம்களில் கைதிகளின் உறவினர்கள் வசித்து வருவதால் அவர்களை சந்திக்க சிறையில் இருந்து தப்பிய கைதிகள் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகின.

இதையடுத்து, சிறையில் இருந்து தப்பிய பாலஸ்தீன கைதிகளின் உறவினர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியது. தப்பியோடிய கைதிகளை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் இஸ்ரேல் போலீசார் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழலில் கில்போவா சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய 6 பாலஸ்தீன கைதிகளில் 4 பேரை பிடித்துவிட்டதாக இஸ்ரேல் போலீசார் தெரிவித்தனர். மேலும், தப்பியோடியவர்களில் எஞ்சிய 2 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இஸ்ரேல் போலீசார் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் இஸ்ரேலில் கில்போவா சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீனியர்களில் பிடிபடாமல் இருந்து வந்த கடைசி 2 பேரும் சிக்கினர். அவர்களை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக உளவுத்துறையின் உதவியுடன் கைதிகள் பதுங்கி இருந்த மறைவிடத்தை சுற்றி வளைத்த ராணுவத்தினர், மேற்குக் கரையில் உள்ள சொந்த ஊரான ஜெனினில் இருவரும் சரணடைந்ததாக தெரிவித்தது. 

Next Story