அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கைத்துப்பாக்கியுடன் ஒருவர் பிடிபட்டதால் பரபரப்பு


அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கைத்துப்பாக்கியுடன் ஒருவர் பிடிபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Sep 2021 11:20 PM GMT (Updated: 19 Sep 2021 11:20 PM GMT)

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கைத்துப்பாக்கியுடன் ஒருவர் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதற்கான நாடாளுமன்ற அங்கீகரிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது தோல்வி அடைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திலேயே வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். பலர் உயிரிழந்தனர். 

அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் இது கரும்புள்ளியாக அமைந்தது. இந்த வன்முறை தொடர்பாக ஏறத்தாழ 600 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீதி கேட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேப்பிட்டல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஒருவர் கைத்துப்பாக்கியுடன் காணப்பட்டு போலீசாரிடம் பிடிபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பல குற்றச்சாட்டுகளின்பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி கேபிட்டல்ஹில் அருகே அமைந்துள்ள யூனியன் சதுக்கம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அங்கு வானில் ஹெலிகாப்டரும் பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை டிரம்ப் ஆதரவு அமைப்பான லுக் அஹெட் அமெரிக்கா ஏற்பாடு செய்திருந்தது.

Next Story