ஆப்கானிஸ்தான்: காபூல் மாநகராட்சியில் பணி செய்ய பெண் ஊழியர்களுக்கு தலீபான்கள் தடை


ஆப்கானிஸ்தான்:  காபூல் மாநகராட்சியில் பணி செய்ய பெண் ஊழியர்களுக்கு தலீபான்கள் தடை
x
தினத்தந்தி 20 Sep 2021 8:36 AM GMT (Updated: 20 Sep 2021 8:51 AM GMT)

ஆப்கானிஸ்தானின் காபூல் மாநகராட்சியில் பணி செய்ய பெண் ஊழியர்களுக்கு தலீபான்கள் தடை விதித்து உள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிரான நீண்டகால போரில் ஆட்சி அதிகாரம் தலீபான்கள் அமைப்பிடம் சென்றுள்ளது.  இதனை தொடர்ந்து, முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடினார்.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றி ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் கடந்த 7ந்தேதி இடைக்கால அரசு நிறுவப்பட்டது.  அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைப்போம் என தலீபான்கள் கூறி வந்தனர்.

பெண்கள் வேலை பார்க்க அனுமதி, கல்வி உரிமை உள்ளிட்ட பிற உரிமைகள் வழங்கப்படும் என்றும் கூறினர்.  ஆனால், அதற்கு எதிராக சமீபத்தில் மகளிர் நலத்துறை அமைச்சகம் கலைக்கப்பட்டது.

இது அந்நாட்டு பெண்களிடையே கொந்தளிப்பு ஏற்படுத்தியது.  அவர்கள் தலீபான்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி, கோஷங்களை எழுப்பியபடி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லவும் தடை விதித்ததுடன், ஆண்கள் மட்டும் வந்தால் போதும் என முன்பே அறிவித்து இருந்தது.  இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மாநகராட்சி பெண் ஊழியர்கள் பணிக்கு வர தலீபான்கள் தடை விதித்து உள்ளனர்.  

எனினும், மாநகராட்சியில் பெண்களால் மட்டுமே செய்ய முடியும் பணிக்கு செல்ல, அவர்களுக்கு தலீபான் அமைப்பினர் அனுமதி அளித்து உள்ளனர்.


Next Story