ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்புகள்; 40 பேர் கைது


ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்புகள்; 40 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sep 2021 6:07 AM GMT (Updated: 21 Sep 2021 6:07 AM GMT)

ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிரான போரில் ஆட்சி அதிகாரம் தலீபான்கள் அமைப்பிடம் சென்றுள்ளது.  அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.  அந்நாட்டில் போதிய உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் 5 வயதுக்கு உட்பட்ட 1 கோடி குழந்தைகள் தவித்து வருகின்றனர் என யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்து வருகின்றன.  அந்நாட்டின் காபூல் நகரில் பி.டி.13 பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று கடந்த 3 நாட்களுக்கு முன் வெடித்து உள்ளது.  இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதேபோன்று நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில் தலீபான்களை இலக்காக கொண்டு அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்து உள்ளன.  இந்த தாக்குதல்களில் 3 பேர் பலியாகி உள்ளனர்.  21 பேர் காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளனர்.  மொத்த உயிரிழப்புகளில் 3 பேர் பொதுமக்கள் ஆவர்.  மற்றவர்கள் தலீபான் போராளிகள் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அந்நாட்டில் தலீபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்த முதல் குண்டுவெடிப்பு இதுவாகும்.  இதற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த நிலையில், நங்கர்ஹார் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரில் நேற்று முன்தினம் மாலை தலீபான்கள் சென்ற வாகனம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.

இதில், ஒரு குழந்தை கொல்லப்பட்டது.  இதேபோன்று, தலீபான் இயக்க உறுப்பினர் உள்பட 2 பேர் காயமடைந்து உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.  பொதுமக்களின் வாழ்வு மற்றும் சொத்துகளுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என தலீபான்கள் உறுதி அளித்திருந்த சூழலில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்து உள்ளன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜலாலாபாத் நகரில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என உளவு துறை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.  உளவு துறை அதிகாரிகள் இலக்காக வைக்கப்படுகின்றனர் என அந்த துறை தலைவர் பஷீர் கூறியுள்ளார்.


Next Story