அமெரிக்காவுக்குள் நுழையும் ஹைதி அகதிகள் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைப்பு


அமெரிக்காவுக்குள் நுழையும் ஹைதி அகதிகள் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 21 Sep 2021 12:06 PM GMT (Updated: 21 Sep 2021 12:06 PM GMT)

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் ஹைதி நாட்டின் அகதிகளை சொந்தநாட்டிற்கே அமெரிக்க அரசு அனுப்பி வைக்கிறது.

வாஷிங்டன்,

கரீபியன் தீவு நாடான ஹைதியில் கடந்த சில மாதங்களாக அரசியல், பொருளாதார ரீதியில் குழப்பம் நிலவி வருகிறது. அந்நாட்டின் அதிபர் ஜோவினல் மொசி கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். 

அதுமட்டுமின்றி ஹைதியில் கடந்த மாதம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் குழப்பங்களை சந்தித்து வரும் ஹைதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.

பொருளாதாரம், வாழ்வாதாரத்தை தேடி ஹைதியில் இருந்து மெக்சிகோ= வழியாக அந்நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்து வருகின்றனர். 

கடந்த சில நாட்களாக மெக்சிகோவில் இருந்து டெக்சாஸ் மாகாண எல்லையில் அமைந்திருக்கும் டெல்ரியோ நகரில் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான அகதிகள் குவிந்துள்ளனர். இவர்கள் ரியோ கிராண்டி ஆற்றை கடந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர். அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ள ஹைதி அகதிகளை மீண்டும் அவர்களது சொந்த நாட்டிற்கே அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது. ஹைதி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 12 ஆயிரம் அகதிகளை அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. 

இதற்காக, அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதிகளில் 6 ஆயிரத்து 500 பேரை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர்.

முதற்கட்டமாக, 150-க்கும் மேற்பட்ட அகதிகளை விமானம் மூலம் ஹைதி நாட்டிற்கு அமெரிக்க திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

Next Story