நாய்க்குட்டியை 3 நாட்கள் பிணைக்கைதியாக வைத்திருந்த குரங்கு


நாய்க்குட்டியை 3 நாட்கள் பிணைக்கைதியாக வைத்திருந்த குரங்கு
x
தினத்தந்தி 21 Sep 2021 12:46 PM GMT (Updated: 21 Sep 2021 12:46 PM GMT)

குரங்கிடம் பிணைக்கைதியாக இருந்த செல்லப்பிராணி நாய்க்குட்டி 3 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர்,

மலேசியாவின் சிலங்ஹொர் மாகாணம் தமன் லெஸ்டரி புட்ரா பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது.

இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வளர்த்து வந்த 2 மாதங்களே நிரம்பிய செல்லப்பிராணி நாய்க்குட்டியை கடந்த வியாழக்கிழமை அங்கு சுற்றித்திரிந்த ஒரு குரங்கு தூக்கிச்சென்றது.

நாய்க்குட்டியை அந்த குரங்கு மரக்கிளைகளில் மறைத்து வைத்துக்கொண்டது. மேலும், அந்த குரங்கு எங்கு செல்லும்போதும் நாய்க்குட்டியை தன்னுடன் எடுத்துச்சென்றது. இந்த சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மீட்புக்குழுவினர் அங்கு வந்து குரங்கின் பிடியில் சிக்கிய நாய்க்குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், மூன்று நாட்களாக நடைபெற்ற மீட்புப்பணிகள் தோல்வியில் முடிந்தன. இதனால், நாய்க்குட்டி மிகுந்த சோர்வு அடைந்தது. இறுதியில் 3 நாட்கள் கழித்து தனது பிடியில் இருந்த நாய்க்குட்டியை குரங்கு விடுவித்தது. மரத்தில் கிளையில் கிழே விழுந்த நாய்க்குட்டியை மீட்புப்பணியில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டனர்.

3 நாட்கள் குரங்கின் பிடியில் இருந்த நாய்க்குட்டி மிகுந்த உடல்சோர்வுடன் காணப்பட்டதால் அதற்கு போதிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய்க்குட்டியை தனது குழந்தை என எண்ணியே குரங்கு இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என விலங்கு நல ஆர்வளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story