குவாட் உச்சி மாநாடு: வாஷிங்டன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு


குவாட் உச்சி மாநாடு: வாஷிங்டன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 23 Sep 2021 12:24 AM GMT (Updated: 23 Sep 2021 12:24 AM GMT)

4 நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, தனது பயணத்தால் இருதரப்பு ராணுவ கூட்டு வலுப்படும் என்று தெரிவித்திருந்தார்.

புதுடெல்லி, 

பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு நவம்பருக்கு பின்னர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 26, 27-ந்தேதிகளில் அண்டை நாடான வங்காளதேசத்துக்கு மட்டும் சென்று வந்தார்.

இந்த நிலையில் அவர் அமெரிக்காவுக்கு 4 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நேற்று காலை 11 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வாஷிங்டன் புறப்பட்டார். இன்று (23-ந்தேதி) அவர், அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசை முதன்முதலாக சந்தித்து பேசுகிறார்.

இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி வாஷிங்டன் சென்றடைந்துள்ளார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோருடன் குவாட் என்னும் 4 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகிறார்.

அத்துடன் அவர் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஜோ பைடன் ஜனாதிபதியான பின்னர், அவரை மோடி சந்திப்பது இதுவே முதல் முறை.

முன்னணி அமெரிக்க தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி களையும் மோடி சந்தித்து பேசுவார், அப்போது அவர்களை இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு வருமாறும், முதலீடுகள் செய்யுமாறும் அழைப்பு விடுப்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இத்துடன் வாஷிங்டன் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் நியூயார்க் நகருக்கு செல்கிறார். அங்கு நாளை மறுதினம் (25-ந்தேதி) ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் 100 நாடுகளின் தலைவர்களுடன் கலந்துகொண்டு உரை ஆற்றுகிறார்.

அப்போது அவர் கொரோனா வைரஸ் தொற்று பரவல், உலகளாவிய பயங்கரவாதம், பயங்கரவாதத்தை ஒடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்ளிட்டவை பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story