அமெரிக்காவில் மோடி: துணை அதிபர் கமலா ஹாரிசுடன் சந்திப்பு


அமெரிக்காவில் மோடி: துணை அதிபர் கமலா ஹாரிசுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 23 Sep 2021 8:06 PM GMT (Updated: 23 Sep 2021 8:06 PM GMT)

வாஷிங்டனில் துணை அதிபர் கமலா ஹாரிசை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

வாஷிங்டன், 

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு புறப்பட்டார். நேற்று காலை அவர் வாஷிங்டன் போய்ச்சேர்ந்தார்.

அவரை அமெரிக்க அரசின் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு துணைச்செயலாளர் (நிர்வாகம் மற்றும் வளங்கள்) பிரையன் மெக்கீன், இந்திய தூதர் தரண்ஜித் சிங் உள்பட அதிகார வர்க்கத்தினர் வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளுக்குப்பின் பிரதமர் மோடி அமெரிக்காவில் தனது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளை தொடங்கினார். இதில் முதலாவதாக அமெரிக்காவை சேர்ந்த 5 உயர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

இதனைத்தொடர்ந்து வாஷிங்டனில் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி அவரை நேரில் சந்திக்க உள்ளார். ஆப்கன் விவகாரம் அதன் தாக்கங்கள், சீனாவின் ஆதிக்கம், தீவிரவாதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், அமெரிக்க - இந்திய கூட்டணியை மேலும் விரிவுப்படுத்துவது எப்படி போன்ற வி்வகாரங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.<

இந்நிலையில் அமெரிக்க துணை அதிபரும் இந்திய வம்சாளியைச் சேர்ந்த கமலா ஹாரிசை இன்று பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலா ஹாரிஸ், “இந்தியா அமெரிக்காவின் மிக முக்கியமான பங்குதாரர். இந்தியாவில் கொரோனா அதிகரித்ததையடுத்து, இந்தியா அதன் தேவை மற்றும் அதன் மக்களுக்கு தடுப்பூசி போடும் பொறுப்பை ஆதரிப்பதில் அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது. கொரோனா பாதிப்பின்போது, எங்கள் நாடுகள் ஒன்றாக வேலை செய்தன. தொற்றுநோயின் ஆரம்பத்தில், இந்தியா மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளின் முக்கிய ஆதாரமாக இருந்தது. பருவநிலை நெருக்கடியை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பது எனக்குத் தெரியும். அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படுவதால் நமது மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார். 


Next Story