பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியீடு


பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியீடு
x
தினத்தந்தி 23 Sep 2021 9:42 PM GMT (Updated: 23 Sep 2021 9:42 PM GMT)

இந்தியா அமெரிக்காவின் மிக முக்கியமான பங்குதாரர் என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன், 

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி அவரை நேரில் சந்திக்க உள்ளார். ஆப்கன் விவகாரம் அதன் தாக்கங்கள், சீனாவின் ஆதிக்கம், தீவிரவாதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், அமெரிக்க - இந்திய கூட்டணியை மேலும் விரிவுப்படுத்துவது எப்படி போன்ற வி்வகாரங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க துணை அதிபரும் இந்திய வம்சாளியைச் சேர்ந்த கமலா ஹாரிசை இன்று பிரதமர் மோடி சந்தித்தார். தொடர்ந்து பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் சமீபத்திய உலகளாவிய மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இரு தலைவர்களும் தங்கள் துடிப்பான இருதரப்பு கூட்டாண்மை, வளர்ந்து வரும் மற்றும் முக்கியமான தொழில்நுட்பங்கள், சுகாதாரம், கல்வி மற்றும் பி 2 பி இணைப்புகளை குறித்து விவாதித்தனர்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலா ஹாரிஸ், “இந்தியா அமெரிக்காவின் மிக முக்கியமான பங்குதாரர். இந்தியாவில் கொரோனா அதிகரித்ததையடுத்து, இந்தியா அதன் தேவை மற்றும் அதன் மக்களுக்கு தடுப்பூசி போடும் பொறுப்பை ஆதரிப்பதில் அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது. கொரோனா பாதிப்பின்போது, எங்கள் நாடுகள் ஒன்றாக வேலை செய்தன. தொற்றுநோயின் ஆரம்பத்தில், இந்தியா மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளின் முக்கிய ஆதாரமாக இருந்தது. பருவநிலை நெருக்கடியை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பது எனக்குத் தெரியும். அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படுவதால் நமது மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார். 

தொடர்ந்து கொரோனா பாதிப்பின் போது இந்தியாவிற்கு உதவி செய்ததற்காக அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், “அமெரிக்காவின் துணை அதிபராக உங்கள் (கமலா ஹாரிஸ்) தேர்வு செய்தது ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று நிகழ்வாகும். நீங்கள் உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள். ஜோ பைடன் மற்றும் உங்கள் தலைமையின் கீழ் எங்கள் இருதரப்பு உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன் ” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Next Story