வாஷிங்டனில் ஜப்பான் பிரதமரை சந்தித்தார் மோடி


வாஷிங்டனில் ஜப்பான் பிரதமரை சந்தித்தார் மோடி
x
தினத்தந்தி 24 Sep 2021 12:05 AM GMT (Updated: 24 Sep 2021 12:05 AM GMT)

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஜப்பான் பிரதமரை சந்தித்து பேசினார்.

வாஷிங்டன், 

உலக வரைபடத்தில் நாற்கர (குவாட்) வடிவில் அமைந்திருக்கும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் குவாட் குழுவை உருவாக்கி உள்ளன. இந்த குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டனில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உள்ளிட்டோரை சந்தித்தார். மேலும் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி அவரை நேரில் சந்திக்க உள்ளார். 

இந்த நிலையில் குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைடே சுஹாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்த தகவல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் ஜப்பான் பிரதமருடனான சந்திப்பின் போது, இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சி, விநியோகச் சங்கிலி பின்னடைவு, வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story