குவாட் கூட்டமைப்புக்கு எந்த ஆதரவும் கிடைக்காது: சீனா


குவாட் கூட்டமைப்புக்கு எந்த ஆதரவும் கிடைக்காது: சீனா
x
தினத்தந்தி 24 Sep 2021 8:41 PM GMT (Updated: 24 Sep 2021 8:41 PM GMT)

குவாட் கூட்டமைப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டு ‘குவாட்’ கூட்டமைப்பை உருவாக்கின. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனா முன்வைக்கும் சவால்களை ஓர் அணியாக இணைந்து எதிர்கொள்வதை நோக்கமாக கொண்டு இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் இருந்தே இந்த குவாட் கூட்டமைப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் குவாட் நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் முதல் உச்சி மாநாடு அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் குவாட் மாநாட்டை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறுகையில், “எந்தவொரு பிராந்திய ஒத்துழைப்பு பொறிமுறையும் மூன்றாம் தரப்பினரை குறிவைக்கவோ அல்லது அதன் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கவோ கூடாது என்று சீனா எப்போதும் நம்புகிறது. மூன்றாம் நாட்டிற்கு எதிராக பிரத்யோகமான இந்த குழு பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் காலத்தின் போக்கு மற்றும் விருப்பங்களுக்கு எதிராக இயங்குகிறது. அதற்கு எந்த ஆதரவும் கிடைக்காது” என கூறினார்.

Next Story