அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித காலடி தடங்கள் கண்டுபிடிப்பு


அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித காலடி தடங்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 24 Sep 2021 10:03 PM GMT (Updated: 24 Sep 2021 10:03 PM GMT)

அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள நியூமெக்சிகோ மாகாணத்தில் நடந்து வரும் தொல்பொருள் ஆய்வின்போது, ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்தனர். வெள்ளை மணல் தேசிய பூங்காவில் உள்ள ஒரு வறண்ட ஏரிக்கரையில் இந்த புதைபடிவ காலடி தடங்கள் கண்டறியப்பட்டதாகவும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் காலடி தடங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த கண்டுபிடிப்பு, இடம்பெயர்வு குறித்து நீண்ட காலமாக நிலவும் மர்மத்துக்கு வெளிச்சம் காட்ட உதவும் என்றும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் எப்போது அமெரிக்காவுக்கு வந்தனர் என்பதை கண்டறிய வழிவகை செய்யும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில் “ஆசியாவை, அலாஸ்காவுடன் இணைத்த நிலப் பாலம் வழியாக முந்தையை மனித இடப்பெயர்வுகள் இருந்ததாக நம்படுகிறது. 13,000 முதல் 26,000 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மனித குடியேற்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைபடிவ காலடி தடங்கள் அதை உறுதி செய்கின்றன. இந்த காலடி தடங்களை பாதுகாப்பதற்கு ஒரே வழி இந்த தடங்களை புகைப்படங்களாக எடுத்துக் கொள்வது மற்றும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அவற்றை தெளிவாக்குவது ஆகும்” என்றனர்.

Next Story