உலக செய்திகள்

ஐ.நா.சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி + "||" + 'Arsonist disguising as fire-fighter': India's strong reply after Pakistan raises Kashmir issue at UNGA

ஐ.நா.சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

ஐ.நா.சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
ஐ.நா.சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது. அந்த நாடு தீ வைத்துக்கொண்டே தீயணைப்பு வீரர் போல வேஷமிடுகிறது என இந்தியா கூறியது.
காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய இம்ரான்கான்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேரில் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் அவரது வீடியோ பேச்சு நேற்று ஒளிபரப்பப்பட்டது. 25 நிமிடங்கள் ஒளிபரப்பட்ட இந்த பேச்சில் அவர் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு பறித்த விவகாரம், பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி மரணம் ஆகியவையும் அவரது பேச்சில் எதிரொலித்தது.

இந்தியா சரியான பதிலடி
இந்தியா தனது பதில் அளிக்கும் உரிமையை சரியாக பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு தனது முதன்மைச் செயலாளர் சினேகா துபே மூலம் பதிலடி கொடுத்தது. அப்போது சினேகா துபே பேசியபோது கூறியதாவது:-

எங்கள் நாட்டின் உள்நாட்டு விஷயங்களை கொண்டு வந்து உலக அரங்கில் பொய்யைப் பரப்பி இந்த புகழ்பெற்ற மன்றத்தின் புகழைக் குலைக்கும் பாகிஸ்தான் தலைவரின் மற்றொரு முயற்சிக்கு நாங்கள் பதில் அளிக்கும் உரிமையைப் பயன்படுத்துகிறோம்.இத்தகைய அறிக்கைகள், எங்களது கூட்டு அவமதிப்பு மற்றும் அனுதாபத்துக்குத்தான் தகுதியானவை.

‘பயங்கரவாதிகளை வளர்த்து விடுகிறது’
பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு பலியாகி வருவதாக தொடர்ந்து கூறப்படுவதை நாங்கள் கேட்டு வருகிறோம். ஆனால் பாகிஸ்தான் அப்படிப்பட்ட நாடு அல்ல.அந்த நாடு தீ வைத்துக்கொண்டே, தன்னை தீயணைப்பு வீரர் போன்று வேஷமிட்டு வருகிறது. பாகிஸ்தான் தனது அண்டை நாட்டுக்கு மட்டுமே தீங்கு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் கொல்லைப்புறமாக பயங்கரவாதிகளை வளர்த்து விடுகிறது. எங்கள் நாடு மட்டுமின்றி, உண்மையில் அவர்களின் கொள்கைகளால் முழு உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம், அவர்கள் தங்கள் நாட்டில் மதவெறி வன்முறையை பயங்கரவாத செயல்களாக காட்டி மறைக்க முயற்சிக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர், லடாக்
ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த, எப்போதும் பிரிக்க முடியாத பகுதிகளாக இருக்கும். பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளும் இதில் அடங்கும். பாகிஸ்தான் சட்டவிரோத ஆக்கிரமிப்பு பகுதிகளை உடனடியாக காலி செய்தாக வேண்டும்.எங்கள் நாட்டுக்கு எதிராக பொய்யான, தீங்கு இழைக்கிற பிரசாரத்தை பரப்புவதற்கு பாகிஸ்தான் தலைவர், ஐ.நா. அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல என்பது வருத்தம் அளிக்கிறது.

பயங்கரவாதிகளுக்கு இலவச பாஸ்
பயங்கரவாதிகள் இலவச பாஸ் பெற்ற நாடாக பாகிஸ்தான் உள்ளது. ஆனால், இதில் இருந்து உலகின் கவனத்தை திசை திருப்ப வீணாக தேடுகிறது. அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் நினைவுநாளை சர்வதேச சமூகம் கடைபிடித்துக்கொண்டிருக்கிறது.ஆனால், இந்த தாக்குதல்களின் பின்னால் மூளையாக இருந்து செயல்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்தது. இன்றைக்கும் கூட பாகிஸ்தான் தலைமை, பின்லேடனைத் தியாகி என போற்றிப்புகழ்கிறது. பயங்கரவாத செயல்களை இன்றைக்கும் பாகிஸ்தான் தலைவர் நியாயப்படுத்த முயற்சிப்பது வருத்தம் தருகிறது. பயங்கரவாதத்தை பாதுகாப்பதை நவீன உலகில் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தியாவின் நிலைப்பாடு
இந்தியாவைப் பொறுத்தமட்டில், பாகிஸ்தான் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் இயல்பான உறவை வைத்துக்கொள்ளவே விரும்புகிறது. அதே நேரத்தில், பாகிஸ்தான் நம்பகமான, சரி பார்க்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதின் மூலம் தனது கட்டுப்பாட்டில் உள்ள எந்த பகுதியையும் இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கிற, உதவுகிற, தீவிரமாக ஆதரிக்கிற வரலாற்றைக் கொண்டிருக்கிறது என்பதை உறுப்பு நாடுகள் அனைத்தும் அறியும். அந்த நாடு பயங்கரவாதிகளை வெளிப்படையாக ஆதரிப்பது, பயிற்சி அளிப்பது, நிதி அளிப்பது, ஆயுதங்களை ஏந்த வைப்பது, அதன் கொள்கையாகவே இருக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளை அதிக எண்ணிக்கையில் வைத்திருந்த நாடு என்ற இழிவான பதிவைக் கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
2. வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: தலீபான்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்!
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தலீபான்களுக்கு ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.