இந்தியர்களுக்கு விசா வழங்க மறுக்கும் சீனாவுக்கு இந்தியா எதிர்ப்பு


சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி
x
சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி
தினத்தந்தி 26 Sep 2021 5:49 PM GMT (Updated: 26 Sep 2021 5:49 PM GMT)

சீனாவுக்கு திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பது ஏமாற்றம் அளிப்பதாக இந்தியா கூறியுள்ளது.

திரும்ப முடியாமல் தவிப்பு
உலக அளவில் சீனாவில்தான் முதன்முதலில் கொரோனா தாக்கியது. உடனே அங்கு படித்து வரும் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள், நூற்றுக்கணக்கான தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் குடும்பத்துடன் இந்தியா திரும்பினர். பின்னர், இந்தியாவிலும் கொரோனா பரவத் தொடங்கியவுடன் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு வரும் விமான சேவைக்கு சீனா தடை விதித்து விட்டது. இந்தியர்களுக்கு விசா வழங்குவதையும் நிறுத்தி வைத்தது. இதனால், ஒன்றரை ஆண்டுகளாக இந்தியர்கள் சீனாவுக்கு திரும்ப முடியாமல் இந்தியாவிலேயே இருக்கிறார்கள்.

இந்திய தூதர்
இந்தநிலையில், இந்தியா-சீனா உறவுகள் தொடர்பான 4-வது உயர்மட்ட பேச்சுவார்த்தை காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில், சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி பங்கேற்றார். 

அவர் பேசியதாவது:-

இந்திய மாணவர்கள், தொழிலதிபர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் ஆகியோர் சீனாவுக்கு திரும்புவது இருதரப்பு தூதரக நிலைப்பாடு சாராத, மனிதாபிமான பிரச்சினை. அவர்கள் ஒன்றரை ஆண்டுகளாக இந்தியாவில் தவித்து வருகிறார்கள். இதில், உணர்வுபூர்வமான அணுகுமுறை தேவை.

ஏமாற்றம்
தற்போதைய கருத்து வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், வர்த்தக உறவை இந்தியா கடைபிடித்து வருகிறது. உதாரணமாக, சீன தொழிலதிபர்கள் இந்தியா வருவதற்கு தொடர்ந்து விசா அளித்து வருகிறது.இருப்பினும், இந்திய மாணவர்கள், தொழிலதிபர்கள் சந்தித்து வரும் பிரச்சினையில் அறிவியலுக்கு பொருந்தாத அணுகுமுறையை சீனா பின்பற்றுவது ஏமாற்றம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story