குற்றவாளிகளுக்கு கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை; தலீபான்களுக்கு அமெரிக்கா கண்டனம்


குற்றவாளிகளுக்கு கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை; தலீபான்களுக்கு அமெரிக்கா கண்டனம்
x
தினத்தந்தி 26 Sep 2021 6:13 PM GMT (Updated: 26 Sep 2021 6:13 PM GMT)

மரண தண்டனை விவகாரம் தொடர்பாக தலீபான்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலீபான் பயங்கரவாதிகள் கடந்த முறை தங்கள் ஆட்சியில் இருந்ததை போல மோசமான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை, திருடுபவர்களின் கை, கால்களை துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அண்மையில் அறிவித்தனர். 

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் ஹெரட் மாகாணத்தில் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை தலீபான்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அவர்களின் உடல்களை பொதுஇடங்களில் தொங்கவிட்டனர். இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மரண தண்டனை விவகாரம் தொடர்பாக தலீபான்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது:-

தலீபான்கள் ஷரியத் சட்டத்தின் கீழ் மேற்கொண்டுள்ளோம் என கூறி நிறைவேற்றும் தண்டனைகள் தெளிவாக மனித உரிமைகளை மீறுவதாக உள்ளன. ஆப்கானிஸ்தானில் மனித உரிமையை உறுதி செய்ய சர்வதேச சமூகத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுகிறோம். தலீபான்களின் தண்டனை குறித்த அறிக்கை மட்டுமல்லாமல் அவர்களின் செயல்பாடுகளையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆப்கானிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், குழந்தைகளின் நலன் காக்க நாங்கள் துணை நிற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story