அமெரிக்க டாலர் பற்றாக்குறையால் இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும் சிக்கல்


அமெரிக்க டாலர் பற்றாக்குறையால் இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும் சிக்கல்
x
தினத்தந்தி 26 Sep 2021 8:49 PM GMT (Updated: 26 Sep 2021 8:49 PM GMT)

இலங்கையில் அமெரிக்க டாலர் பற்றாக்குறையால் இறக்குமதியில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் நாட்டுக்குள் கொண்டு செல்ல இயலாமல் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு பெட்டகங்கள் தேங்கிக் கிடக்கின்றன.

விண்ணைத் தொட்ட விலைவாசி
இலங்கையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, கொரோனா தொற்று காரணமாக சர்வதேச சந்தையில் விலைகள் உயர்வு காரணமாக சமீப நாட்களாக விலைவாசி விண்ணைத் தொட்டுவருகிறது. அரிசி, சர்க்கரை, வெங்காயம், உருளைக்கிழங்கு, பால் பவுடர், மண்ணெண்ணெய், சமையல் கியாஸ் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள் இப்பொருட்களுக்காக கடைகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை
அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுக்கு வியாபாரிகளின் பதுக்கலே காரணம் என்று குறை கூறிய அரசு, அதைத் தடுக்கும்விதமாக கடந்த மாதம் 31-ம் தேதி பொருளாதார அவசரநிலையையும் அறிவித்தது. அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது. ஆனால் இன்னும் நிலைமை சீரடையவில்லை. மாறாக, உணவுப்பொருட்கள், சமையல் கியாசுக்கு இன்னும் கடும் பற்றாக்குறை ஏற்படும் என்று இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக பிரதமர் மகிந்த ராஜபக்சேயுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர்கள், பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரினர். அதற்கு அரசு இணங்கவில்லை.

மேலும் விலை உயரும்
இந்நிலையில், பால், உணவுப்பொருட்கள், கியாஸ், சிமெண்ட் போன்றவற்றின் விலை மேலும் உயரும். இறக்குமதிக்கு பயன்படுத்தப்படும் அமெரிக்க டாலர் பற்றாக்குறையாலும், உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு காரணமாகவுமே இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று நுகர்வோர் விவகார மந்திரி பந்துல குணவர்த்தனா தெரிவித்துள்ளார். டாலர் பற்றாக்குறை பிரச்சினை தொடர்பாக இறக்குமதியாளர்களுடன் இலங்கை மத்திய வங்கி பேசும் என்றும், அப்போது இறக்குமதியாளர்களுக்கான சலுகைகள் குறித்து அந்த வங்கி அறிவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். நீண்ட காலத் தீர்வுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்த்தகர்கள் வலியுறுத்துகின்றனர்.

துறைமுகத்தில் தேங்கிய உணவுப்பொருட்கள்
தற்போதைய நிலையில், உள்ளூர் வங்கிகளில் போதிய அமெரிக்க டாலர்கள் இருப்பு இல்லாததால், கொழும்பு துறைமுகத்துக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட சரக்கு பெட்டகங்களில் வந்துள்ள அத்தியாவசிய உணவுப்பொருட்களை நாட்டுக்குள் எடுத்துச் செல்ல முடியாமல் தவிப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதிச் சிக்கலுக்கு இலங்கை அரசு விரைவான, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எல்லா தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதுவரை அந்நாட்டு சாதாரண மக்களுக்கு அவதிதான்.


Next Story