மியான்மரில் ராணுவ ஆட்சிக்குப் பிறகு பொருளாதாரம் கடும் வீழ்ச்சி


மியான்மரில் ராணுவ ஆட்சிக்குப் பிறகு பொருளாதாரம் கடும் வீழ்ச்சி
x
தினத்தந்தி 29 Sep 2021 12:19 PM GMT (Updated: 29 Sep 2021 12:19 PM GMT)

ராணுவ ஆட்சி அமலுக்கு வந்து 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

யாங்கோன்,

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டு காவலில் வைத்துள்ளது. 

ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை ராணுவம் கொடூரமாக அடக்கிவருகிறது. இதில், ராணுவ ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்குழுவினர் மட்டுமின்றி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர். 

ராணுவ ஆட்சி அமலுக்கு வந்து 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்கள், எரிபொருள் விலை உயர்வால் மக்கள் திண்டாடி வருகின்றனர். மியான்மரின் நாணயமான கியாத்- தின் மதிப்பு 60- சதவிகிதம் சரிந்துள்ளது. கடந்த 1 ஆம் தேதி டாலருக்கு நிகரான கியாத்  மதிப்பு 1,695- ஆக இருந்தது. ஆனால், தற்போது 2,700  - கியாத்  வரை அதிகரித்துள்ளது என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பிப்ரவரி  1 ஆம் தேதி டாலருக்கு நிகரான கியாத்தின் மதிப்பு 1,395- ஆக இருந்தது. 

மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதும், வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்த மக்கள், தங்கத்தில் முதலீடு செய்ததாகவும் தற்போது பண மதிப்பு வீழ்ச்சியால் தங்கத்தை விற்க முயற்சித்து வருவதாகவும் அந்நாட்டு பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 


Next Story