தடுப்பூசிகள் குறித்த தவறான வழிகாட்டும் வீடியோக்கள் நீக்கப்படும் - யூடியூப்


தடுப்பூசிகள் குறித்த தவறான வழிகாட்டும் வீடியோக்கள் நீக்கப்படும் - யூடியூப்
x
தினத்தந்தி 30 Sep 2021 5:49 AM GMT (Updated: 30 Sep 2021 5:49 AM GMT)

தடுப்பூசிகள் குறித்த தவறான வழிகாட்டுதல்களை குறைக்கும் வகையில் தடுப்பூசிகள் குறித்த புதிய மருத்துவ கொள்கைகளை யூடியூப் வெளியிட்டுள்ளது.

கலிபோர்னியா

உலக சுகாதார நிறுவனம்  மற்றும் மருத்துவ அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் பயனுள்ள, தடுப்பூசிகள் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களுடன் புதிய மருத்துவ கொள்கைகளை யூடியூப்  நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

தடுப்பூசிகள் குறித்த தவறான கருத்துகளை வீடியோக்கள் மூலம் பரப்பினால் அந்த வீடியோக்கள் நீக்கப்படும் என அந்த நிறுவனம் கூறி உள்ளது. கடந்த ஆண்டு முதல் கொரோனா  தடுப்பூசி கொள்கைகளை மீறியதற்காக 1,30,000 க்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஆபத்தானவை, நாள்பட்ட உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என பொய்யான செய்திகளை பரப்பும் வீடியோக்கள் நீக்கப்படும். கொரோனா தடுப்பூசி குறித்து மட்டுமில்லாது அங்கீகரிக்கப்பட்ட எந்த தடுப்பூசி குறித்தும் தவறான கருத்துகளை பரப்பும் பட்சத்தில் அந்த வீடியோக்கள் நீக்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளது. 

புதிய தடுப்பூசி சோதனைகள், வரலாற்றில் தடுப்பூசியின் வெற்றிகள் அல்லது தோல்விகள், தடுப்பூசிகள் குறித்த பொது விவாதம் ஆகியவற்றை  உள்ளடக்கமாக கொண்டு இருக்கும் வீடியோக்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். வீடியோ மற்ற சமூக வழிகாட்டுதல்களை மீறாத வரை அந்த வீடியோக்கள் அனுமதிக்கப்படும் என்றும் யூடியூப் நிறுவனம் கூறி உள்ளது.

Next Story