இத்தாலி விமான விபத்து - வீடியோ வெளியீடு


இத்தாலி விமான விபத்து - வீடியோ வெளியீடு
x
தினத்தந்தி 9 Oct 2021 8:52 AM GMT (Updated: 9 Oct 2021 8:52 AM GMT)

இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற விமான விபத்து குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ரோம்,

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று சுரங்கப்பாதை அருகே மோதி விபத்துக்குள்ளானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த விமான விபத்தில் அதில் பயணித்த அனைவரும் பலியாகினர். 

மிலன் நகரின் லிணட் விமான நிலையத்தில் இருந்து இத்தாலியின் சார்டிநியா தீவுகளில் உள்ள ஆல்பியா விமான நிலையத்துக்கு புறப்பட்ட சில நிமிடங்களிளேயே விபத்து நடந்துள்ளது. மிலன் நகரின் அருகிலுள்ள சிறிய நகரமான  சாண் டொணட்டோ மிலனிசில் உள்ள  சுரங்கப்பாதை நிலையம் அருகே விபத்து நடந்துள்ளது. இதில் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. 

ஒரு இன்ஜின் கொண்ட சிறிய  பி.சி-12 ரக விமானம்,  புறப்பட்ட சில நிமிடங்களிளேயே மிலன் நகரில் உள்ள இரண்டு அடுக்குகள் கொண்ட அலுவலக கட்டிடத்தின் கூரை மீது மோதி விபத்துக்குள்ளானது.  இந்நிலையில், விபத்து நடந்தபோது அவ்வழியாக சாலையில் சென்ற ஒரு வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை ரோமானியா டிவி வெளியிட்டுள்ளது.

விமானம் செங்குத்தாக பயணித்து கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. ரோமானிய நாட்டின் மாபெரும் பணக்காரர் டேன் பெட்ரஸ்கு(68 வயது) இந்த விமானத்தை இயக்கியுள்ளார். விமானத்தில் அவருடைய மனைவி, மகன் உட்பட 7 பேர் பயணித்துள்ளனர்.பெட்ரஸ்குவின் நண்பர் பிலிப்போ நாஸ்கிம்பேன்(33 வயது) அவருடைய மனைவி, மாமியார் மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகியோரும் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

மிலன் நகரின் லிணட் விமான நிலையத்தில் இருந்து பகல் 1 மணிக்கு இந்த விமானம் கிளம்பியுள்ளது.அவர் விமானத்தை மாற்று பாதையில்  இயக்கியுள்ளார். இதனால் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார். ஆனால்  அதற்கு அவரிடமிருந்து முறையான பதில் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அந்நாட்டின் தேசிய விமான பாதுகாப்பு நிறுவனம் (ஏ என் எஸ் வி) தெரிவித்துள்ளது.


Next Story