பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை ஏ.க்யூ.கான் மறைவு


பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை ஏ.க்யூ.கான் மறைவு
x
தினத்தந்தி 10 Oct 2021 6:59 AM GMT (Updated: 10 Oct 2021 6:59 AM GMT)

பகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் அப்துல் காதிர் கான் இன்று மரணம் அடைந்தார்.

இஸ்லாமாபாத்,

பகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் அப்துல் காதிர் கான் இன்று காலை மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 85.நேற்றிரவு உடல்நிலை மோசமடைந்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் இருந்தது தெரிய வந்தது. இதனால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், நுரையீரல் செயலிழப்பால் இன்று காலை 7 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் பர்வேஷ் கட்டாக் மற்றும் பிற மத்திய அமைச்சர்கள்  அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

‘டாக்டர் அப்துல் காதிர் கானின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நம் நாட்டுக்கு பெரும் இழப்பு; தேசத்துக்கான அவரது சேவைகளை பாகிஸ்தான் என்றென்றும் கவுரவிக்கும். பாகிஸ்தானின் பாதுகாப்பு திறனை மேம்படுத்த அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. அதற்காக நாடு என்றென்றும் அவருக்கு கடமைப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் பர்வேஷ் கட்டாக்  டுவிட்டரில் உருது மொழியில் பதிவிட்டுள்ளார். 

மறைந்த டாக்டர் அப்துல் காதிர் கான், பாகிஸ்தான் நட்டின் அணுசக்தி திட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர். உலக அளவில் அணு ஆயுத பெருக்கம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. லிபியா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுக்கு அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை  வழங்கியதாக அவர் மீது புகார் இருந்தது. அந்த  குற்றத்தை 2004-ம் ஆண்டு அவர் ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story