அமீரகத்துக்கான 7 நாடுகளின் புதிய தூதர்கள்


அமீரகத்துக்கான 7 நாடுகளின் புதிய தூதர்கள்
x
தினத்தந்தி 10 Oct 2021 9:56 PM GMT (Updated: 10 Oct 2021 9:56 PM GMT)

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமிடம் அமீரகத்துக்கான 7 நாடுகளை சேர்ந்த புதிய தூதர்கள் நேரடியாகவும், காணொலி மூலமாகவும் தங்கள் சான்று ஆவணங்களை அளித்தனர்.

7 நாடுகளுக்கான புதிய தூதர்கள்

பல்வேறு நாடுகளின் தூதர்கள் பொறுப்பேற்கும்போது அவர்கள் தங்கள் நாட்டில் இருந்து அளிக்கப்பட்ட நியமனத்திற்கான சான்று ஆவணத்தை அதிபர் அல்லது அதற்கு இணையான பொறுப்பில் உள்ளவர்களிடம் ஒப்படைத்து பணியாற்ற வேண்டும் என்ற மரபு பின்பற்றப்பட்டு வருகிறது. அமீரகத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அதன்படி நேற்று அமீரகத்துக்கு ஜோர்டான், ஸ்பெயின், டிஜிபவுட்டி, ஜிம்பாவே, கம்போடியா, ஹாண்டுராஸ், பூட்டான் ஆகிய 7 நாடுகளுக்கான புதிய தூதர்கள் பதவி ஏற்றனர். இதற்காக துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில், ஜோர்டான் நாட்டு தூதர் நாசர் ஹபஸ்னா, ஸ்பெயின் நாட்டு தூதர் இனிகோ டி பலசியோ, டிஜிபவுட்டி நாட்டிற்கான தூதர் மவுசா முகம்மது அகமது, ஜிம்பாவே தூதர் லவ்மோர் மசேமோ ஆகியோர் தங்கள் பணி நியமனத்திற்கான சான்று ஆவணத்தை துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமிடம் அளித்து வாழ்த்து பெற்றனர்.

உறுதிமொழி ஏற்றனர்

அதேபோல அமீரகத்தில் வசிக்காத வெளிநாட்டு தூதர்களாக கம்போடியாவுக்கான தூதர் ஹுன் ஹான், ஹண்டுராஸ் நாட்டு தூதர் லுயிஸ் அலோன்சோ வெலஸ்குவிஸ் மற்றும் பூட்டான் நாட்டு தூதர் சித்தன் டென்ஜின் ஆகியோர் காணொலி மூலம் அவரவர் நாட்டில் இருந்தபடியே சான்று ஆவணங்களை அளித்து உறுதிமொழி ஏற்றனர்.

இதனை பெற்றுக்கொண்ட துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கூறுகையில், ‘நட்பு நாடுகளின் தூதர்களை வரவேற்கிறேன். அவர்களது பணிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் அமீரகம் செய்து தரும். பெருந்தொற்று காலத்திற்கு பிந்தைய இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி அடுத்த நிலைக்கு இருதரப்பு உறவுகளையும் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பணியில் வெற்றிபெற வாழ்த்துகள்’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், துணை ஆட்சியாளர் மேதகு ஷேக் மக்தூம் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், அமீரக உள்துறை மந்திரி ஷேக் சைப் பின் ஜாயித் அல் நஹ்யான், அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story