செயல்பாடுகள் மூலமே தலீபான்கள் மதிப்பிடப்படுவார்கள்: அமெரிக்கா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Oct 2021 3:38 AM GMT (Updated: 12 Oct 2021 3:38 AM GMT)

வார்த்தைகளால் அல்ல, செயல்பாடுகள் மூலமே தலீபான்கள் மதிப்பிடப்படுவார்கள் என்று அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், 

ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முதல் முறையாக தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளும், அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளும் கடந்த 9-ந்தேதி கத்தார் தலைநகர் தோகாவில் சந்தித்து பேசினர். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தநிலையில் தலீபான்களுடனான பேச்சுவார்த்தை நேர்மறையாக அமைந்ததாகவும் எனினும் தலீபான்களின் செயல்பாடுகள் மூலமே அவர்கள் மதிப்பிடப்படுவார்கள் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் ‘‘தலீபான் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை நேர்மறையாகவும், தொழில் ரீதியாகவும் அமைந்தது. ஆப்கானிஸ்தான் சமூகத்தின் பல்வேறு அம்சங்களில் பெண்களின் பங்கேற்பு உட்பட பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்டவற்றில் இந்த பேச்சுவார்த்தை கவனம் செலுத்தியது’’ என கூறினார். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நேரடியாக அமெரிக்காவின் மனிதாபிமான உதவிகளை வழங்குவது பற்றியும் இரு தரப்பினரும் விவாதித்ததாக நெட் பிரைஸ் கூறினார்.

மேலும் அவர் ‘‘பேச்சுவார்த்தை சுமுகமாக அமைந்தாலும், தலீபான்களின் செயல்பாடுகள் மூலமாகவே அவர்கள் மதிப்பிடப்படுவார்கள், அவர்களின் வார்த்தைகளால் அல்ல என்பதை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்துகிறது’’ என தெரிவித்தார்.

Next Story