உலக செய்திகள்

இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்யச் சென்ற மாணவர்கள் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு + "||" + Eleven students drown while cleaning a river in Indonesia

இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்யச் சென்ற மாணவர்கள் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்யச் சென்ற மாணவர்கள் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பள்ளி மாணவர்கள் 11 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் ஆண்டு தோறும் கனமழையின் காரணமாக பயங்கர நிலச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். மேலும் வெள்ளத்தில் அடித்து வரப்படும் குப்பை கூழங்கள் ஆறுகளில் தேங்கி சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. 

இதனால் இந்தோனேசியாவில் உள்ள ஏராளமான தன்னார்வ அமைப்புகள் வெள்ளம் வடிந்த பிறகு, ஆறுகளில் தேங்கிய குப்பைகூழங்களை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளை செய்து வருகின்றன. அந்த வகையில் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சியாமிஸ் நகரில் உள்ள உயர்நிலை பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவர்கள் நேற்று முன்தினம் அங்குள்ள சிலியூர் ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களின் மேற்பார்வையில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். அப்போது மாணவர்களில் சிலர் ஆற்றில் இருந்த பாறைகள் வழியாக ஆற்றை கடக்க முயன்றனர். 21 மாணவர்கள் ஒருவரின் கையை ஒருவர் பிடித்தப்படி ரெயில் பெட்டி போல பாறையில் நடந்து சென்றனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த மாணவர் ஒருவர் திடீரென கால் இடறி ஆற்றுக்குள் விழுந்தார். 

அவரை தொடர்ந்து மற்ற 20 மாணவர்களும் அடுத்தடுத்து ஆற்றுக்குள் விழுந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. கரையில் நின்று கொண்டிருந்த சக மாணவர்கள் அனைவரும் தங்கள் நண்பர்கள் ஆற்றில் மூழ்குவதை கண்டு அலறினர். மாணவர்களின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ஆற்றுக்குள் இறங்கி மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

உடனடியாக இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் ரப்பர் படகுகளை பயன்படுத்தி மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் இந்த தேடுதல் வேட்டை நீடித்தது.

இருந்தபோதிலும் 11 மாணவர்களின் உயிரற்ற உடல்களை தான் மீட்க முடிந்தது. அதே சமயம் 10 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்ட அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பள்ளி மாணவர்கள் 11 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.
2. இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
இந்தோனேசியாவில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு!
இந்தோனேசியாவின் சுமத்ராவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
4. இந்தோனேசியாவில் சரக்கு விமானம் விழுந்து விபத்து - விமானி பலி
இந்தோனேசியாவில் சரக்கு விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி பலியாகினார்.
5. இந்தோனேசியாவின் பாலி தீவில் 4.8 ரிக்டரில் நிலநடுக்கம்: 3 பேர் பலி
இந்தோனேசியாவிலுள்ள பாலி தீவில் 4.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர்.