உலக செய்திகள்

விண்வெளியில் படப்பிடிப்பை முடித்து வெற்றிகரமாக திரும்பிய படக்குழு - வரலாற்று சாதனை படைத்தது ரஷியா + "||" + Finish shooting in space Successful film crew - Russia set a historic record

விண்வெளியில் படப்பிடிப்பை முடித்து வெற்றிகரமாக திரும்பிய படக்குழு - வரலாற்று சாதனை படைத்தது ரஷியா

விண்வெளியில் படப்பிடிப்பை முடித்து வெற்றிகரமாக திரும்பிய படக்குழு - வரலாற்று சாதனை படைத்தது ரஷியா
ரஷியாவின் திரைப்பட குழு விண்வெளியில் படப்பிடிப்பை முடித்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது. இதன் மூலம் ரஷியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.
மாஸ்கோ,

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு கடும் போட்டியாக விளங்குவது ரஷியாவின் ராஸ்கோமாஸ் நிறுவனம்தான்.

விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனைகளை படைப்பதில் அமெரிக்காவை முந்த வேண்டும் என்பதில் ரஷியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் விண்வெளியில் முதல் திரைப்படத்தை எடுப்பதில் அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையே போட்டி நிலவி வந்தது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூசை வைத்து, விண்வெளியில் முதல் திரைப்படத்தை எடுக்க உள்ளதாக நாசா கடந்த ஆண்டு அறிவித்தது.

ஆனால் அதன் பின்னர் அந்த படம் குறித்து வேறு எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.‌ அதேவேளையில் ரஷியா விண்வெளியில் முதல் திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் முழு மூச்சில் இறங்கியது.

அதன்படி ரஷியாவின் ராஸ்கோமாஸ் நிறுவனம், விண்வெளியில் எடுக்கப்படும் முதல் திரைப்படத்தின் பெயர் மற்றும் திரைப்பட குழுவை கடந்த மே மாதம் அறிவித்தது.

‘சேலஞ்ச்’ (சவால்) என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை பிரபல இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ இயக்குவார் என்றும் கதையின் நாயகியாக யுலியா பெரெசில்ட் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

புவிஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் விண்வெளி வீரர் ஒருவருக்கு அவசர இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில், பெண் மருத்துவர் ஒருவர் விண்வெளிக்கு சென்று இந்த சவாலான பணியை எப்படி வெற்றிகரமாக செய்து முடிக்கிறார் என்பதே படத்தின் மையக்கரு ஆகும்.

இந்த நிலையில் ‘சவால்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை யுலியா பெரெசில்ட், இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ மற்றும் அவர்களின் உதவிக்காக விண்வெளி வீரர் அன்டன் ஷகாப்லெரோவ் ஆகியோர் கடந்த 5-ந் தேதி கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் நகரில் இருந்து ‘சோயுஸ் எம்.எஸ்-19’ விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

படத்தின் பெயருக்கு ஏற்ப விண்வெளியில் படப்பிடிப்பை நடத்துவது அதன் குழுவுக்கு ஒரு சவாலான பணி என்பதில் எந்த சந்தேகம் இல்லை. இருப்பினும் அந்த குழு திட்டமிட்டபடி 12 நாட்களில் விண்வெளியில் படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

இதைதொடர்ந்து நடிகை யுலியா பெரெசில்ட், இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ மற்றும் விண்வெளி வீரர் அன்டன் ஷகாப்லெரோவ் ஆகிய 3 பேரும் இந்திய நேரப்படி நேற்று காலை 6:35 மணிக்கு ‘சோயுஸ் எம்.எஸ்-19’ விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர்.

இதையடுத்து, 3½ மணி நேர பயணத்துக்கு பின்னர் இந்திய நேரப்படி காலை 10:05 மணிக்கு கஜகஸ்தான் நாட்டின் ஜெஸ்கஸ்கான் நகரின் தொலைதூர பகுதியில் ‘சோயுஸ் எம்.எஸ்-19’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.

அதனை தொடர்ந்து அங்கு தயார் நிலையில் இருந்த ராஸ்கோமாஸ் குழுவினர் விண்கலத்தில் இருந்து 3 பேரையும் பத்திரமாக வெளியேற்றினர்.

அப்போது அவர்கள் 3 பேரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்பட்டனர். இதையடுத்து, அங்கு திரண்டிருந்த பத்திரிகையாளர்கள் மலர் கொத்துகளை கொடுத்து 3 பேரையும் வரவேற்றனர்.

இதன் மூலம் விண்வெளியில் திரைப்படம் எடுத்த உலகின் முதல் நாடாக ரஷியா வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.