சீன பொருளாதாரம் கடும் சரிவு


சீன பொருளாதாரம் கடும் சரிவு
x
தினத்தந்தி 18 Oct 2021 10:14 PM GMT (Updated: 2021-10-19T03:44:10+05:30)

ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவு, நிலக்கரி பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் சீனாவின் பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளது.

பீஜிங்,

உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில்தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியது.

இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பல லட்சம் உயிர்களை பறித்ததோடு மட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தது. பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்டெடுக்க உலக நாடுகள் இன்னும் போராடிக்கொண்டிருக்கின்றன. அதேவேளையில் கொரோனா தொற்றில் இருந்து விரைவாக மீண்டு வந்த சீனா தனது பொருளாதாரத்தையும் குறுகிய காலத்திலேயே மீட்டெடுத்தது.

கடும் சரிவை சந்திக்கும் பொருளாதாரம்

கொரோனா தொற்றுக்கு பிறகும் சீனாவின் பொருளாதாரம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 2.3 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.

எனினும் இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான வளர்ச்சியாக பார்க்கப்பட்டது.

அதே வேளையில் கொரோனா தொற்றுக்கு பிறகு பொருளாதாரத்தில் வளர்ச்சி கொண்ட ஒரே நாடாக இருந்தது.

ஆனால் தற்போது ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவு, நிலக்கரி பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் சீனாவின் பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்தது

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3-ம் காலாண்டில் வெறும் 4.9 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இது 2-ம் காலாண்டில் 7.9 சதவீதமாக இருந்தது. முதலாம் காலாண்டில் 18.3 சதவீதமாக இருந்தது. 3-ம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முந்தைய காலாண்டை விட 5 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது முந்தைய காலாண்டை விட 3 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 3-ம் காலாண்டின் தரவை வெளியிட்ட தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் பூ லிங்ஹுய் இது குறித்து கூறுகையில் ‘‘சர்வதேச சூழலில் தற்போதைய நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருவதையும் உள்நாட்டு பொருளாதார மீட்பு இன்னும் நிலையற்றதாகவும் சீரற்றதாகவும் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்’’ என கூறினார்.

திவாலான ரியல் எஸ்டேட் நிறுவனம்

இதனிடையே 4-வது காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கூடுதல் அழுத்தத்தை எதிர்கொள்ளும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறையின் பங்கு முதன்மையானது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29 சதவீதம் அளவில் ரியல் எஸ்டேட் துறை பங்கு வகிக்கிறது.

கடந்த வாரம் சீனாவின் மிகப்பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான எவர்கிராண்ட் திவாலானதாக அறிவித்ததும், இது சீனாவின் பொருளாதாரத்தில் கடும் சிக்கலை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story