வங்காள தேசத்தில் வன்முறை : 20 இந்துக்கள் வீடுகளுக்கு தீவைப்பு


வங்காள தேசத்தில் வன்முறை : 20 இந்துக்கள் வீடுகளுக்கு தீவைப்பு
x
தினத்தந்தி 19 Oct 2021 10:56 AM GMT (Updated: 19 Oct 2021 10:56 AM GMT)

வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

டாக்கா: 

வங்காளதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், சமூக வலைதளங்களில்  குறிப்பிட்ட மதம் குறித்து அவதூறு பரப்பியதாக சில தினங்களுக்கு முன்னதாக குமிலா என்ற இடத்தில் நவராத்திரியையொட்டி துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இந்து கோவில்கள், 60-க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால் பதற்றமும், வன்முறையும்  பல இடங்களில் பரவியது. உடனே  போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனையடுத்து. அந்நாட்டு உள்துறை மந்திரி அசாதுஜமான் கான் கமல் இந்த சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அதன்படிப்படையில், வன்முறையாளர்கள் 100 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டனர். 4 வன்முறையாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில், நேற்று 20-க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகளுக்கு வன்முறையாளர்கள் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.66 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது. டாக்காவிலிருந்து 225 கி.மீ. தூரத்தில் உள்ள ரங்கபுர் என்ற கிராமத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. வங்காள அரசு கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்த போதும் இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து நடந்து வருகிறது.

வங்காளதேச  சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவுடனான உறவை சேதப்படுத்தும் சதியின் ஒரு பகுதியாகும். இந்த சம்பவங்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவங்கள் மீது வங்காளதேச அரசு  கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என திரிபுரா முதல் மந்திரி  பிப்லாப் தேப் கூறி உள்ளார்.

Next Story