பேஸ்புக்கின் பெயர் மாறுகிறதா? - வெளியான தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Oct 2021 11:06 PM GMT (Updated: 20 Oct 2021 11:06 PM GMT)

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்படவுள்ளதாக ‘தி வேர்ஜ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க், 

சமூக வலைத்தளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் திகழ்ந்து வருகிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பேஸ்புக் முடங்கியது. இதனால் அதன் பயனர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இந்த நிலையில் பேஸ்புக்கின் பெயரை மாற்ற அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர் பெர்க் முடிவு செய்துள்ளதாகவும், இதனை வருகிற 28-ந்தேதி நடைபெறும் நிறுவனத்தின் வருடாந்திர இணைப்பு மாநாட்டில் தெரிவிக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவின் பிரபல தொழில் நுட்ப வலைத்தளமான ‘தி வெர்ஜ்’ இந்த தகவலை தெரிவித்துள்ளது. அதே வேளையில் யூகங்கள், வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது என பேஸ்புக் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மெடாவெர்ஸ் என்ற மெய்நிகர் உலகை படைப்பதில் பேஸ்புக் நிறுவனம் கவனம் செலுத்திவருகிறது. இதற்கு மத்தியில், பேஸ்புக் நிறுவனம் பெயர் மாற்றவிருக்கிறது. மெடாவெர்ஸ் என்பது இணைய உலகமாகும். பல்வேறு கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் மக்கள் இந்த உலகின் நகர முடியும் மற்றவர்களிடம் பேச முடியும்.

Next Story