செவ்வாய் கிரகத்தின் சத்தம் எப்படி இருக்கும்..? பதிவு செய்து அனுப்பிய நாசா விண்கலம்


செவ்வாய் கிரகத்தின் சத்தம் எப்படி இருக்கும்..?  பதிவு செய்து அனுப்பிய நாசா விண்கலம்
x
தினத்தந்தி 21 Oct 2021 5:24 AM GMT (Updated: 21 Oct 2021 7:15 AM GMT)

செவ்வாய் கிரக ஆய்வுக்காக நாசா அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் அங்குள்ள சத்தங்களை பதிவு செய்து அனுப்பி வருகிறது.

வாஷிங்டன்,

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. 

கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி அனுப்பப்பட்ட இந்த விண்கலம், கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதற்கு முன் நாசா அனுப்பிய ஆர்பிட்டர்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், இந்த குறிப்பிட்ட பள்ளத்தாக்கு பகுதியில் நீர்நிலைகள் இருந்ததற்கான ஆதாரம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதியதால், இந்த ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ பகுதியை ஆய்வுக்காக நாசா தேர்ந்தெடுத்தது.

கடந்த சில தினங்களுக்கு முன் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலத்தின் ரோவர் கருவி மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டது. செவ்வாய் கிரகத்தின் மேல்பரப்பில் அமைந்துள்ள மலைகள், பாறைகள், படிமங்கள் ஆகியவற்றை இதுவரை இல்லாத அளவு துல்லியமான தரத்தில் இந்த புகைப்படங்களில் காணமுடிந்தது. 

இந்த நிலையில் ரோவர் கருவியில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிவாங்கி(மைக்ரோஃபோன்) மூலம் செவ்வாய் கிரகத்தில் பதிவு செய்யப்பட்ட சத்தங்களை ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் பூமிக்கு அனுப்பி வருகிறது. செவ்வாய் கிரகத்தில் சரளைக் கற்கள் மீது ரோவர் ஏறும்போதும், அங்கிருக்கும் கற்களை ரோவர் கருவி கதிர்வீச்சு மூலமாக உடைத்த போதும் பதிவான சத்தம் பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு செவ்வாய் கிரகத்தில் இருந்து அனுப்பப்பட்ட 5 மணி நேரத்திற்கும் மேலான சத்தங்களை பதிவு செய்து வைத்திருப்பதாகவும், இவை அனைத்தும் அடுத்த கட்ட ஆய்விற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. 

Next Story