அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை கடலில் குதித்து மீட்ட நபர்...!


அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை கடலில் குதித்து மீட்ட நபர்...!
x
தினத்தந்தி 22 Oct 2021 12:14 AM GMT (Updated: 22 Oct 2021 12:14 AM GMT)

அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை படகில் சென்ற நபர் கடலில் குதித்து பத்திரமாக மீட்டுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள போர்ட் லாடர்டெய்ல் கடற்கரையில் இருந்து ஜக்கேப் டூடுயிட் தனது நண்பர்களுடன் நேற்று படகில் அட்லாண்டிக் கடலில் பயணம் மேற்கொண்டார். அப்போது, கடலில் செல்லப்பிராணி நாய்க்குட்டி ஒன்று தன்னந்தனியே தத்தளித்துக்கொண்டிருந்தது.

இதை பார்த்த ஜக்கேப் உடனடியாக கடலில் குதித்து தத்தளித்த நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டார். படகில் இருந்த சக நண்பர்கள் குளிரில் நடுங்கிய நாய்க்குட்டியின் உடலை துவட்டி விட்டனர்.

நாய்க்குட்டி நடுக்கடலுக்கு எப்படி சென்றது? இது யாருடைய நாய்க்குட்டி என்பது குறித்த விவரம் தெரியாததால் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், அந்த நாய்க்குட்டியின் கழுத்தில் அணிந்திருந்த பட்டையில் நாய்க்குட்டியின் உரிமையாளர் யார் என்பது குறித்து விவரம் தெரிந்தது. அவரை தொடர்பு கொண்ட ஜேக்கப் செல்லப்பிராணி நாய்க்குட்டி தங்களிடம் பாதுகாப்பாக உள்ளது என கூறினார்.

இதனை தொடர்ந்து, கரை திரும்பிய ஜேக்கப்பை செல்லப்பிராணி நாய்க்குட்டியின் உரிமையாளர் சந்தித்தார். அவரிடம் செல்லப்பிராணியை ஜேக்கப் பத்திரமாக ஒப்படைத்தார். நாய்க்குட்டியை அதன் படகில் கடலுக்கு அழைத்து சென்றுள்ளார். 

அப்போது, படகில் யாரும் கவனிக்காத நேரத்தில் நாய்க்குட்டி கடலில் குதித்துள்ளது. நாய்க்குட்டி படகில் தான் உள்ளது என்ற எண்ணத்தில் அதன் உரிமையாளர் இருந்துள்ளார். ஆனால், ஜேக்கப்பின் அழைப்பை தொடர்ந்தே தனது செல்லப்பிராணி நாய்க்குட்டி கடலில் குதித்துள்ளது என்பதையும் அதை ஜேக்கப் மீட்டுள்ளார் என்பதையும் தெரிந்துகொண்டுள்ளார். 

நாய்க்குட்டியை ஜேக்கப் கடலில் குதித்து மீட்பதை ஜேக்கப்பின் நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Next Story