தைவானை அமெரிக்கா பாதுகாக்கும்: ஜோ பைடன்


தைவானை அமெரிக்கா பாதுகாக்கும்: ஜோ பைடன்
x
தினத்தந்தி 22 Oct 2021 5:51 PM GMT (Updated: 22 Oct 2021 5:51 PM GMT)

சீனா தைவானை தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்பு அளிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசு கூறி வருகிறது. அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. இந்த சூழலில் அண்மை காலமாக தைவான் மற்றும் சீனா இடையே ராணுவ பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனா தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கும் என தைவான் அச்சத்தில் உள்ளது.

இந்த நிலையில் சீனா தைவானை தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்பு அளிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் இதில் பொறுப்புடன் இருக்கிறோம். தைவானுடனான எங்கள் உறவில் எந்த மாற்றமும் இல்லை. சீனா தைவானை தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்போம்” என கூறினார். 

இதனிடையே ஜோ பைடனின் இந்த கருத்துக்கு சீனா பதில் அளித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் இது குறித்து கூறுகையில், “சீனாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பிற தேசிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகள் வரும்போது, சீனா சமரசம் செய்யவோ அல்லது விட்டுக்கொடுக்கவோ இடமில்லை’’ என கூறினார்.


Next Story