போதைப்பொருள் கும்பல்கள் இடையிலான துப்பாக்கி சண்டையில் பலியான இந்திய பெண் என்ஜினீயர் குறித்த தகவல்கள்


போதைப்பொருள் கும்பல்கள் இடையிலான துப்பாக்கி சண்டையில் பலியான இந்திய பெண் என்ஜினீயர் குறித்த தகவல்கள்
x
தினத்தந்தி 23 Oct 2021 5:46 PM GMT (Updated: 23 Oct 2021 5:46 PM GMT)

மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல்கள் இடையிலான துப்பாக்கி சண்டையில் பலியான இந்திய பெண் குறித்து உருக்கமான தகவல்கள் வெயியாகி உள்ளன.

போதைப்பொருள் கும்பல்கள் இடையே துப்பாக்கி சண்டை

மெக்சிகோவில் கரீபியன் கடலில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரமான துலும் நகரில் கடந்த புதன்கிழமை இரவு போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது அங்குள்ள ஓட்டலில் உணவு அருந்தி கொண்டிருந்த இந்திய பெண் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பெண்ணின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து பரிதாபமாக இறந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய பெண் குறித்து உருக்கமான தகவல்கள்

இந்த நிலையில் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையிலான துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த இந்திய பெண் குறித்த உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்தியாவின் இமாசலபிரதேசம் மாநிலம் சோலன் நகரில் பிறந்து, அமெரிக்காவில் வசித்து வந்தவர் அஞ்சலி ரியோட். இமாசலபிரதேசத்தின் ஜேபி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பி டெக் படித்து முடித்த அஞ்சலி ரியோட், முதுகலை பட்டப்படிப்புக்காக கடந்த 2012-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஜான் ஜோஸ் நகருக்கு சென்றார்.

பயண ஆர்வலராக இருந்து வந்தவர்

2 ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடித்த அவர் அமெரிக்காவின் பிரபலமான ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலைக்கு சேர்ந்தார். இதற்கிடையில் சான் ஜோஸ் நகரில் உள்ள பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனத்தில் மேலாளராக வேலைபார்த்து வந்த உத்கர்ஷ் ஸ்ரீவஸ்தவா என்பவருடன் அஞ்சலிக்கு திருமணம் நடந்தது. அதன்பின்னர் இருவரும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றனர்.

அஞ்சலி சாப்ட்வேர் என்ஜினீயராக வேலைபார்த்து வந்தாலும் புதுபுது இடங்களுக்கு பயணம் செய்து அதுபற்றிய சுவரஸ்யமான தகவல்களை இணையத்தில் பகிர்வதில் ஆர்வமிக்கவராக இருந்து வந்தார்.

பிறந்தநாளை கொண்டாட மெக்சிகோ சென்றார்

இந்த நிலையில் அஞ்சலி, தனது கணவருடன் மெக்சிகோவுக்கு சென்று அக்டோபர் 22-ந்தேதி தனது 30-வது பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தார். இதற்காக கணவன் மனைவி இருவரும் கடந்த 18-ந்தேதி அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு சென்றனர். அதன்பின்னர் 20-ந்தேதி துலும் நகரை சுற்றிப்பார்க்க சென்ற அஞ்சலி-ஸ்ரீவஸ்தவா தம்பதி இரவு நேரத்தில் அங்குள்ள திறந்த வெளி ஓட்டலில் அமர்ந்து உணவு அருந்தினர். உணவை முடித்துவிட்டு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக இருவரும் காத்திருந்தபோதுதான் அங்கு போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையில் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.

உடலை இந்தியா கொண்டு வர முயற்சி

கண்இமைக்கும் நேரத்தில் அஞ்சலியின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து, அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அடுத்த சில நிமிடங்களில் தனது கணவர் முன்னே அவர் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து துப்பாக்கி சண்டையில் அஞ்சலி உயிரிழந்ததை அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் அஞ்சலியின் இளைய சகோதரரிடம் ஸ்ரீவஸ்தவா தெரியப்படுத்தினார்.

அவர் மூலமாக இமாசலபிரதேசத்தின் சோலன் நகரில் வசித்து வரும் அஞ்சலியின் தாய், தந்தைக்கு தகவல் கிடைத்தது. அஞ்சலியின் இறப்பு அவரது மொத்த குடும்பத்தையும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது. அஞ்சலிக்கு இறுதி சடங்குகளை செய்ய அவரது உடலை இமாசலபிரதேசம் கொண்டுவருவதற்கான முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story