நைஜீரியா: சிறைச்சாலையில் துப்பாக்கியேந்திய கும்பல் தாக்குதல் - 800 கைதிகள் தப்பியோட்டம்


நைஜீரியா: சிறைச்சாலையில் துப்பாக்கியேந்திய கும்பல் தாக்குதல் - 800 கைதிகள் தப்பியோட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2021 11:50 PM GMT (Updated: 23 Oct 2021 11:50 PM GMT)

நைஜீரியாவில் உள்ள சிறைச்சாலைக்குள் புகுந்த துப்பாக்கியேந்திய கும்பல் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 800 கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடினர்.

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. 

இதற்கிடையில், அந்நாட்டின் ஒயோ மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் பயங்கரவாத செயல்கள், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் கைதான குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒயோ மாகாணத்தில் உள்ள சிறைச்சாலைக்குள் நேற்று துப்பாக்கி, வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் சிறைக்காவலர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். மேலும், சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 800 கைதிகளை விடுதலையும் செய்தனர். இதனை தொடர்ந்து கைதிகள் அனைவரும் சிறையில் இருந்து தப்பியோடினர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், தப்பியோடிய கைதிகளில் 262 பேரை மீண்டும் பிடித்து சிறையில் அடைத்தனர். ஆனால், சுமார் 575 கைதிகள் இன்னும் பிடிபடவில்லை. தப்பியோடிய எஞ்சியோரை கைது செய்யும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  

Next Story