கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புர்ஜ் காலிபாவில் ஒளி அமைப்பு.!


கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புர்ஜ் காலிபாவில் ஒளி அமைப்பு.!
x

துபாயில் உள்ள புர்ஜ் காலிபாவில் தெலுங்கானாவின் பத்துகம்மா விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

துபாய்,

உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் காலிபா கட்டிடத்தில்  தெலுங்கானாவில் கொண்டாடப்படும்  பூக்களின் திருவிழாவான  பத்துகம்மா விழாவை சிறப்பிக்கும் விதமாக கட்டிடம் முழுவதும் வண்ண ஒளியால் ஜொலித்தது.  

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், நிசாமாபாத் சட்ட மேலவை உறுப்பினரும்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கல்வகுண்ட்லா கவிதா இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்தார். தெலுங்கானாவின் கலாச்சார மறுமலர்ச்சியை பறைசாற்ற வேண்டும் என்னும் நோக்கத்தில் ‘தெலுங்கானா ஜக்ருதி’ என்னும் அமைப்பு 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தெலுங்கானா மாநிலத்தின் பத்துகம்மா கலாச்சாரத்தை வெளிக்காட்டும் விதமாக மேற்கண்ட நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது.

இந்நிகழ்ச்சியில்  இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து,  இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான  “ அல்லிப்பூழா வெண்ணெலா” பாடல் ஒளிபரப்பப்பட்டது.இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணிக்கு இந்த ஒளி அமைப்பு நிகழ்ச்சி நேரலையாக பல்வேறு சமூக தளங்கள் மற்றும் இணைய தளங்களில் ஒளிபரப்பப்பட்டது. பத்துகம்மா குறித்த ஆவணப்படமும் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. அங்கு வந்திருந்த பார்வையாளர்களால்  ‘ஜெய்ஹிந்த்’  மற்றும் ‘ஜெய் தெலுங்கானா’ வாசகங்கள் உணர்ச்சி பெருக்கோடு   கோஷமிடப்பட்டன. இந்த நிகழ்வில்  இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பல முக்கிய விஐபிக்கள் கலந்து கொண்டனர்.

பத்துகம்மா கொண்டாட்டம் தசரா திருவிழாவின் 10 நாட்களும் விமரிசையாக கொண்டாடப்படும். பத்துகம்மா திருவிழாவில் வாழ்க்கை சிறப்பாக அமைய அம்மனுக்கு பெண்கள் மலர்களால் ஒரு சிறப்பு பானையை அலங்கரித்து,பிரசாதத்துடன் பானையை நிரப்பி, கிராமத்தில் ஊர்வலம் செல்வார்கள்.

Next Story