அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் செல்வாக்கு கடும் சரிவு


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் செல்வாக்கு கடும் சரிவு
x
தினத்தந்தி 24 Oct 2021 5:13 PM GMT (Updated: 24 Oct 2021 5:13 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் செல்வாக்கு கடுமையாக சரிவடைந்துள்ளதாக அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம்பொறுப்பேற்றார். அவர் ஆட்சி பொறுப்பை ஏற்ற சமயத்தில் அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவித்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, வேலையின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்ற பிரச்சினைகளை சரிசெய்வது போன்ற ஏராளமான சவால்கள் அவர் முன் இருந்தன.

இதில் அவரது நிர்வாகத்தால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை தீவிரமாக செயல்படுத்தியதன் மூலம் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. இதனால் பதவிக்கு வந்த 3 மாத காலத்தில் அமெரிக்க மக்களிடம் ஜே பைடனின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்தது. ஆனால் தற்போது ஜோ பைடனின் செல்வாக்கு, இதற்கு முன் வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியும் சந்திக்காத அளவுக்கு கடுமையாக சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் முதல் 3 மாதங்களில் ஜோ பைடனின் செல்வாக்கு 56 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 11.3 சதவீதம் குறைந்து 44.7 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-ம் உலகப்போருக்கு பின்னர் எந்த ஒரு அமெரிக்க ஜனாதிபதியும் இப்படி ஒரு சரிவை சந்தித்தது இல்லை என கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

ஜூலை மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது மற்றும் குழப்பமான சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெற்றது போன்ற காரணங்களால் ஜோ பைடனின் செல்வாக்கு சரிந்ததாக கருதப்படுகிறது.


Next Story