கோவேக்சினுக்கு அங்கீகாரம் வழங்கும் விவகாரம் - கூடுதல் தரவுகளை கேட்கும் உலக சுகாதார அமைப்பு


கோவேக்சினுக்கு அங்கீகாரம் வழங்கும் விவகாரம் - கூடுதல் தரவுகளை கேட்கும் உலக சுகாதார அமைப்பு
x
தினத்தந்தி 28 Oct 2021 12:24 AM GMT (Updated: 28 Oct 2021 12:24 AM GMT)

கோவேக்சினுக்கு அங்கீகாரம் வழங்கும் கூடுதல் உற்பத்தியாளரிடமிருந்து கூடுதல் தெளிவுபடுத்தல்கள் தேவை என உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக்குழு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவுக்கு எதிராக ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கியது. உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. சர்வதேச அளவில் இந்த தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர உலக சுகாதார அமைப்பு, தனது அவசர பயன்பாட்டு பட்டியலில் சேர்த்து அங்கீகாரம் அளிக்க வேண்டும். 

இந்த அங்கீகாரம் பெறுவதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்து விட்டு காத்திருக்கிறது. இதையொட்டி உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக்குழு நேற்று முன்தினம் கூடி விவாதித்தது. இதில் அவசர பயன்பாட்டு அங்கீகாரம் கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. 

கோவேக்சின் தடுப்பூசி பற்றி பாரத் பயோடெக் நிறுவனம் அளித்திருந்த தரவுகளை ஆராய்ந்த தொழில்நுட்ப ஆலோசனைக்குழு, இத்தடுப்பூசியை உலகளாவிய பயன்பாட்டுக்கு கொண்டு வர, இறுதி இடர் பயன் மதிப்பீட்டை நடத்த உற்பத்தியாளரிடமிருந்து கூடுதல் தெளிவுபடுத்தல்கள் தேவை என்று முடிவு செய்தது. 

இந்த கூடுதல் தரவுகளை வார இறுதிக்குள் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து பெற்றுவிடலாம் என தொழில் நுட்ப ஆலோசனைக்குழு எதிர்பார்க்கிறது. அவற்றை பெற்ற பின்னர் அடுத்த கூட்டம் நவம்பர் 3-ந் தேதி நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்திலாவது கோவேக்சின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டு பட்டியலில் சேர்க்க பரிந்துரைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Next Story