வடகொரியாவில் உணவு பஞ்சம்: குறைவாக சாப்பிட அதிபர் உத்தரவு


வடகொரியாவில் உணவு பஞ்சம்: குறைவாக சாப்பிட அதிபர் உத்தரவு
x
தினத்தந்தி 28 Oct 2021 6:10 AM GMT (Updated: 28 Oct 2021 6:10 AM GMT)

வடகொரியாவில் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் 2025-ம் ஆண்டு வரை மக்கள் குறைவாக உணவு சாப்பிட வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பியாங் யாங்,

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வடகொரியாவில் பயிர்கள் சேதம் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, கொரோனா அச்சுறுத்தலால் வட கொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்கு 'சீல்' வைத்துள்ளது.  குறிப்பாக, உணவுப் பொருட்கள், எரிபொருள் என மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் மூடியுள்ளது. இதனால் அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 45 டாலர், 32 யூரோவாக இருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,300 ஆகும்.  வட கொரிய மக்கள் மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் 2025ம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அதிபரின் உத்தரவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வட கொரியாவின் சினுயிஜு நகரத்தில் வசிப்பவர்கள் கூறியதாவது: 2025 வரை அரசு மக்களை குறைவாக உணவு உண்ணச் சொல்கிறது. இது எப்படி சாத்தியம் ஆகும். 

இப்போதே உணவுக் கையிருப்பு நிலை மிகவும் மோசமாக நிலையிலேயே  உள்ளது.  தினமும் உணவு பற்றாக்குறையால் கடுமையாகத் தவித்து வருகிறோம். எங்களுக்கு உணவு பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை?. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசுத் தரப்பில்,  ''வட கொரியா கொரோனாவைக் கட்டுப்படுத்தவே எல்லைகளை மூடியது. அதன் பலனை வட கொரியா அடைந்துள்ளது. அதேபோல் உணவுப் பஞ்சத்தையும் சமாளித்துக் கடந்து வரும்,'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Next Story