நைஜீரியா: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு


நைஜீரியா: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு
x
தினத்தந்தி 5 Nov 2021 5:12 AM GMT (Updated: 5 Nov 2021 5:12 AM GMT)

நைஜீரியாவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் லகோஸ் மாகாணம் இயோகி மாவட்டத்தில் 21 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிட பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த அந்த அடுக்குமாடி கட்டிடம் கடந்த திங்கட்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிடத்தில் வேலை செய்துகொண்டிருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த போது அதில் எத்தனை பேர் வேலை செய்துகொண்டிருந்தனர் என்ற தகவல் தெரியாததால் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

Next Story