பிரான்ஸ்:போலீசார் மீது கத்திகுத்து தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை


பிரான்ஸ்:போலீசார் மீது கத்திகுத்து தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 8 Nov 2021 8:10 AM GMT (Updated: 8 Nov 2021 8:10 AM GMT)

பிரான்சில் போலீசார் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டில் கெனிஸ் நகரில் காவல்நிலையம் ஒன்று உள்ளது. இந்த காவல்நிலையத்தை சேர்ந்த சில போலீசார் இன்று காலை வழக்கமான பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக காரில் ஏறி புறப்பட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த காவல்நிலையத்திற்குள் நுழைந்த நபர் போலீசார் அமர்ந்திருந்த காரின் கதவை திறந்துள்ளார். உடனடியாக தான் மறைத்துவைத்திருந்த கத்தியை கொண்டு காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தினார். 

கத்திக்குத்து தாக்குதலில் அந்த போலீஸ் அதிகாரி படுகாயமடைந்தார். இதனை தொடர்ந்து முன் சீட்டின் மற்றொரு போலீஸ் அதிகாரி மீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்த அந்த நபர் முயன்றார்.

உடனடியாக துரிதமாக செயல்பட்ட காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த மற்றொரு போலீஸ் அதிகாரி, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். 

போலீஸ் அதிகாரி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் உடனடியாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த போலீஸ் அதிகாரி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் யார்? தாக்குதல் நடத்த காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story