பாகிஸ்தானுக்கு அதிநவீன போர்க்கப்பலை வழங்கியது சீனா...!


பாகிஸ்தானுக்கு அதிநவீன போர்க்கப்பலை வழங்கியது சீனா...!
x
தினத்தந்தி 9 Nov 2021 11:54 PM GMT (Updated: 9 Nov 2021 11:54 PM GMT)

தனது நட்பு நாடான பாகிஸ்தானுக்கு அதிநவீன போர்க்கப்பலை சீனா வழங்கி உள்ளது.

பீஜிங், 

இந்திய பெருங்கடல் மற்றும் அரேபிய கடலில் சீனா தனது கடற்படை இருப்பை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதோடு இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்துவதற்காக நட்பு நாடுகளின் கடற்படையை மேம்படுத்த சீனா முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில் சீனா தனது நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட போர்க்கப்பல் ஒன்றை வழங்கியுள்ளது. சீன அரசின் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த போர்க்கப்பல் சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த விழாவில் பாகிஸ்தான் கடற்படையிடம் வழங்கப்பட்டது.

‘பிஎன்எஸ் துக்ரில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் நவீன தற்காப்பு திறன்களுடன் கூடிய அதிநவீன போர் மேலாண்மை கொண்டது எனவும், இதன் மூலம் பாகிஸ்தான் கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு திறன்கள் மேம்படும் எனவும் பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானுக்கு 4 அதிநவீன போர்க்கப்பல்களை வழங்குவது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானதும், அந்த ஒப்பந்தத்தின் கீழ் முதல் கப்பலை சீனா தற்போது வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story