தள்ளிவைக்கப்பட்ட நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் 2026-ல் நடைபெறும்- அமெரிக்கா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Nov 2021 10:14 AM GMT (Updated: 16 Nov 2021 10:15 AM GMT)

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டதாக நாசா கடந்தவாரம் அறிவித்தது.

வாஷிங்டன், 

அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி முதன்முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பியது. அப்போல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் முதன்முதலில் காலடி வைத்து பெருமை சேர்த்தனர்.

அதன் பிறகு அமெரிக்கா நாசா விண்வெளி மையம் பல தடவை மனிதனை நிலவுக்கு அனுப்பி சோதனை நடத்தியது. இதற்கு மிக அதிகமாக செலவானதால் அதன் பின்னர் மனிதர்கள் அனுப்பப்படவில்லை.

டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். 2024-ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பும் பணி நடைபெறும் என்றும் அவர் கூறினார். இதற்காக தனியார் விண்வெளி ஆய்வு மையமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்திடம் ரூ.20 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

ஆனால் கொரோனா பெருந்தொற்றின் காரணமாகவும்  புதிய விண்வெளி உடைகள் மற்றும் தொழில்நுட்ப சவால்கள் போன்றவற்றை நாசா எதிர்கொண்டது. இதனால் கடந்த வாரம் நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. 

இந்த நிலையில் அமெரிக்க அரசாங்க கண்காணிப்பு அமைப்பானது விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான செலவை நாசா துல்லியமாக மதிப்பிடத் தவறிவிட்டதாகவும், ஒட்டுமொத்த  திட்டச் செலவுகளுக்கும் ஒரு விரிவான மற்றும் துல்லியமான செலவு மதிப்பீடு இல்லை என்றும் கூறியது. சந்திரனின் மேற்பரப்புக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டம் 2026- க்குள் செயல்படுத்தப்படும் என்று கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

Next Story