போதையில் தகராறு: மனைவியை 18 முறை கத்தியால் குத்திக்கொன்ற இந்தியருக்கு ஆயுள் தண்டனை


போதையில் தகராறு: மனைவியை 18 முறை கத்தியால் குத்திக்கொன்ற இந்தியருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 16 Nov 2021 11:49 AM GMT (Updated: 16 Nov 2021 11:49 AM GMT)

மனைவியை குத்திக்கொன்ற இந்திய கணவருக்கு இங்கிலாந்து கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

லண்டன்,

இந்தியாவை சேர்ந்த அனில் கில் (47) மற்றும் அவரது மனைவி ரஞ்சித் கில் (43) இங்கிலாந்தின் ஷரி மாகாணம் மில்டன் கினிஸ் நகரில் உள்ள தாமஸ் வேலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பழக்கம் இருந்துள்ளது.

இதற்கிடையில், அனில் அவரது மனைவி ரஞ்சித் கில்லுக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சண்டையின் போது அனில் அவரது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து போதைப்பொருள் பழக்கத்தை ரஞ்சித் அதிகரித்துள்ளார். 

மேலும், தனக்கு போதைப்பொருள் வழங்கும் ஆண் நபருடன் அனிலின் மனைவி ரஞ்சித் பழகியுள்ளார். இந்த பழக்கம் ரஞ்சித்திற்கும் அவருக்கு போதைப்பொருள் வழங்கும் ஆண் நபருக்கும் இடையே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பழக்கம் அனில் கில்லுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.     

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி அனில் கில்லும் அவரது மனைவி ரஞ்சித் கில்லும் ஒன்றாக சேர்ந்து வீட்டில் மது குடித்தும், போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளனர். அப்போது, போதைப்பொருள் வழங்கும் ஆண் நபருக்கும் தனக்கும் உள்ள தொடர்பு குறித்து ரஞ்சித் கில் தனது கணவர் அனிலிடம் கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அனில் கில் வீட்டில் இருந்த கத்தியை கொண்டு அவரது மனைவி ரஞ்சித் கில்லை குத்தியுள்ளார். ரஞ்சித் கிலை 18 முறை அனில் குத்தியுள்ளார். இந்த கத்திகுத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரஞ்சித் கில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உயிரிழந்த ரஞ்சித் கில்லை போர்வையில் சுற்றி குப்பை கொட்டும் இடத்தில் வீசியுள்ளார்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரை தொடர்ந்து அனில் கில் வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், குப்பையில் வீசப்பட்ட ரஞ்சித் கில்லின் உடலையும் போலீசார் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து அனில் கில்லை போலீசார் கைது செய்தனர். அனிலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவி ரஞ்சித்தை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக லுடன் க்ரவுன் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில் அனில் கில் அவரது மனைவி ரஞ்சித் கில்லை கொலை செய்தது உறுதியானது. இதனை தொடர்ந்து அனில் கில்லுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டதன் மூலம் குற்றவாளி அனில் கில் குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். 22 ஆண்டுகளுக்கு பின்னரே குற்றவாளி பரோல் கேட்டு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story