மியான்மரில் புத்த மடாலயத்துக்கு சென்றவர்களில் 15 பேர் ராட்சத அலையில் சிக்கி பலி..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Nov 2021 12:20 AM GMT (Updated: 22 Nov 2021 12:20 AM GMT)

மியான்மரில் புத்த மடாலயத்துக்கு வழிபாடு நடத்த சென்றவர்களை ராட்சத அலை இழுத்து சென்றதில் 15 பேர் உயிரிழந்தனர்.

நோபிடாவ், 

மியான்மரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மோன் மாகாணத்தில் தன்புசாயத் என்கிற சிறிய தீவில் பழமையான புத்த மடாலயம் ஒன்று உள்ளது. இந்த மடாலயம் கடலின் நடுவில் அமைந்துள்ளது.

இதனால் இந்த மடாலயத்துக்கு மக்கள் படகுகளில் சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த மடாலயத்தில் புத்தரின் நினைவு சின்னங்கள் ஏராளமாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்தும் புத்த மதத்தினர் திரளாக இங்கு வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை உள்ளூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த மடாலயத்தில் வழிபாடு நடத்துவதற்காக படகில் சென்றனர். அப்போது கடல் சற்று கொந்தளிப்புடன் காணப்பட்டதாக தெரிகிறது.

பக்தர்களின் படகு மடாலயத்தை நெருங்கியதும், அனைவரும் படகில் இருந்து இறங்கி கடலில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கடலில் ராட்சத அலை எழுந்தது. இதனால் பக்தர்கள் அனைவரும் நிலைதடுமாறி நீரில் விழுந்தனர். அதன்பின்னர் அவர்களை ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்றது. இதனால் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.

இதனிடையே இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். மீட்பு படகுகளில் சென்று, கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் 15 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. அதே வேளையில் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டு கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த பலரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

மேலும் இந்த விபத்தில் 20-க்கும் அதிகமானோர் மாயமானதாக தெரிகிறது. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இருந்தபோதிலும் மீட்பு குழுவினர் முழு நம்பிக்கையுடன் அவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். புத்த மடாலயத்தில் வழிபாடு நடத்த சென்றவர்கள் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மியான்மரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story