ஆப்கானிஸ்தான்: தலீபான்களின் 100 நாட்கள் ஆட்சி எப்படி உள்ளது...?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Nov 2021 2:05 PM GMT (Updated: 23 Nov 2021 2:05 PM GMT)

அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, வேலையில்லாத் திண்டாட்டத்தால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றி 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவது அவர்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து, தலீபான் அமைப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதைதொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் தலிபான் அமைப்பு எடுத்து வருகிறது.

ஆகஸ்ட் 15ம் தேதி காபூலைக் கைப்பற்றி ஆப்கானை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தலீபான்கள் கொண்டு வந்தனர். 40 ஆண்டுகள் நடைபெற்ற போர்களால் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, வேலையில்லாத் திண்டாட்டத்தால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

மறுபுறம் ஐ.எஸ் அமைப்பினர் மற்றும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தலீபான்களை குறி வைத்து தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ளனர். நாட்டில் அமைதியை நிலைநாட்டி பொருளாதாரத்தை மேம்படுத்த தலீபான்கள் படாதபாடு பட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களைப் போல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதில்லை என ஆரம்பத்தில் அறிவித்தாலும் பெண் குழந்தைகள் ஆரம்ப பள்ளிக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளி செல்லவும், உயர் பதவிகள் வகிக்கவும் விதிக்கப்பட்டத் தடையை கண்டித்து பெண்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு தலீபான் அமைப்பு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

அதில், ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நாடகங்களில்  பெண்கள் நடிக்க தடைவிதித்து தலீபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

மேலும், பெண் செய்தியாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் தங்களின் தலையை மறைத்துக் கொள்ளும் ஆடையை அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், எந்த வகையான ஆடை அணிய வேண்டும் என்கிற விவரம் குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இதைத்தவிர ஷரியா சட்டங்கள், இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் மதிப்புகளுக்கு எதிராக கருதப்படும் படங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மதத்தை கொச்சைப்படுத்தும், ஆப்கானியர்களை புண்படுத்தும் வகையிலான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தும் கதாபாத்திரங்களைக் கொண்ட வெளிநாட்டு நாடகங்கள்தான் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story