விஞ்ஞானி ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதி ரூ.96.6 கோடிக்கு ஏலம்!


விஞ்ஞானி ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதி ரூ.96.6 கோடிக்கு ஏலம்!
x
தினத்தந்தி 24 Nov 2021 11:03 AM GMT (Updated: 24 Nov 2021 11:03 AM GMT)

அறிவியல் விஞ்ஞானி ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.96.6 கோடிக்கு( 13 மில்லியன் அமெரிக்க டாலர்) விலை போய் உள்ளது.

பாரிஸ்,

உலகின் தலைசிறந்த அறிவியல் விஞ்ஞானிகளில் ஒருவரான  ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன், தனது சார்பியல் கோட்பாடுகள் மூலம் இயற்பியல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். பாரிஸில் உள்ள கிறிஸ்டி என்ற ஏல நிறுவனம், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஆல்பர்ட்  ஐன்ஸ்டீன்   கைப்பட எழுதிய பிரதியை ஏலத்திற்கு விட்டது. 

இந்நிலையில், ஐன்ஸ்டீன் தனது கையால் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி,  நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.96.6 கோடிக்கு (13 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு) விலை போய் உள்ளது. 

அதன் ஆரம்ப ஏலத்தொகையை 2 மில்லியனிலிருந்து 3 மில்லியன் யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத அரிய விலைக்கு ( 11.7 மில்லியன் யூரோக்கள்) ஏலம் போய் உள்ளது.

அவருடைய நெருங்கிய நண்பரான சுவிட்சர்லாந்து நாட்டின் இயற்பியலாளர் மிச்செல் பெஸ்ஸோ, ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய 54 பக்க எழுத்துப் பிரதியை  பாதுகாப்பாக வைத்திருந்தார். ஐன்ஸ்டீனுடன் இணைந்து அவரும் இந்த ஆராய்ய்ச்சியில் தனது பங்களிப்பை கொடுத்தவர் ஆவார்.

ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த அந்த கோட்பாடு தான், இன்றைய ஜிபிஎஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பத்துக்கான அடித்தளமாக அமைந்துள்ளது.

“ஐன்ஸ்டீனால் எழுதப்பட்ட காலமானது,  பொதுச்சார்பியல் கோட்பாட்டு வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டம் ஆகும். கோட்பாடுகள் தொடர்புடைய நூல்களை ஆவணப்படுத்த எஞ்சியிருக்கும் இரண்டு கையெழுத்துப் பிரதிகளில் இதுவும் ஒன்றாகும்" என ஏலத்தை நடத்திய கிறிஸ்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐன்ஸ்டீனால் 1919ம் ஆண்டுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் மிகவும் அரிதான பொக்கிஷங்களாக பார்க்கப்படுகிறது. அவரை போன்ற மாபெரும் அறிவியல் மேதைகள் குறைந்த அளவிலேயே குறிப்புகளை எழுதி வைத்திருப்பர். அதனல், இந்த எழுத்துப்பிரதி இத்தனை காலம் மிஞ்சியிருந்தது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

அதில், ஐன்ஸ்டீன் தவறுகள் பல புரிந்துள்ளார். எனினும், கோட்பாட்டை முழுமையாக கண்டுபிடித்து கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருந்த காலத்தில் இது எழுதப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு நிற மையால் லேசான மஞ்சள் நிற கசங்கிய தாளாக இந்த எழுத்துப் பிரதி உள்ளது.

ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனால் சார்பியல் கோட்பாடு 1915ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்பின், உலகின் நவீன இயற்பியல் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அவர் கையெழுத்தில் வெளியான கடிதம் (பிரபலமான E=mc² சமன்பாடு) அமெரிக்காவில் 1 மில்லியன் யூரோக்களுக்கு  ஏலம் போயிருந்தது. அதன் ஆரம்ப ஏலத்தொகையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக தொகைக்கு ஏலம் போயிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த ஏலத்தில் இத்தனை பெரிய தொகை கொடுத்து வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதை அந்நிறுவனம் குறிப்பிடவில்லை.

Next Story