இங்கிலாந்து: அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 31 பேர் பலி


இங்கிலாந்து: அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 31 பேர் பலி
x
தினத்தந்தி 25 Nov 2021 6:42 AM GMT (Updated: 25 Nov 2021 6:42 AM GMT)

அட்லாண்டிக் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.

லண்டன், 

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்து உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. 

இதற்கிடையில், அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் - இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே உள்ள இங்கிலிஷ் கணவாய் வழியாக பெண்கள் உள்பட 34 அகதிகள் நேற்று இரவு ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இங்கிலாந்துக்குள் நுழைந்து அங்கிருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இங்கிலிஷ் கணவாய் வழியாக சென்றபோது அகதிகள் படகு திடீரென அட்லாண்டிக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

அப்போது, அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிரான்ஸ் கடலோர காவல்படையினர் அகதிகள் படகு விபத்துக்குள்ளானது குறித்து கண்டுபிடித்தனர். மேலும், படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த அகதிகள் 2 பேரை உயிருடன் மீட்டனர்.  ஆனால், இந்த கோர விபத்தில் படகில் இருந்த 31 அகதிகள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

உயிரிழந்த 31 பேரின் உடல்களையும் பிரான்ஸ் கடலோர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், படகில் பயணம் செய்தவர்களில் ஒரு நபர் கடலில் விழுந்து மாயமாகியுள்ளார். இதனை தொடர்ந்து படகு விபத்தில் சிக்கி கடலில் மூழ்கியவர்களை தேடும் பணியில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story