புதிய வகை கொரோனா வைரஸ்: உலக சுகாதார அமைப்பு இன்று சிறப்பு ஆலோசனை


புதிய வகை கொரோனா  வைரஸ்: உலக சுகாதார அமைப்பு இன்று சிறப்பு ஆலோசனை
x
தினத்தந்தி 26 Nov 2021 10:10 AM GMT (Updated: 26 Nov 2021 10:10 AM GMT)

தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதையடுத்து உலக சுகாதார அமைப்பு இன்று சிறப்பு ஆலோசனை நடத்த உள்ளது.

ஜெனீவா, 

தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு இருக்கும் இந்த கொரோனா மிகவும்  வேகமாக பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் இஸ்ரேலிலும் கண்டறியப்பட்டது. புதிய வகை கொரோனா  இஸ்ரேலில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.  புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு இருப்பதால்,  மீண்டும் ஒரு அவசரநிலை அமல்படுத்துவதற்கான விளிம்பில் இஸ்ரேல்  இருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து விரிவான ஆலோசனை நடத்த உலக சுகாதார அமைப்பின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பெரிய அளவில் உருமாற்றம் அடைந்த வைரஸ், கவலைக்குரிய மாறுபாடு வைரசா அல்லது கவனம் செலுத்த வேண்டிய மாறுபாடு வைரசா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பத் தலைவர் மற்றும் தொற்றுநோய்த் தடுப்பு வல்லுநர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், “இந்த புதிய வகை வைரஸ் குறித்து இதுவரை தெரியாது. இந்த வைரஸ் அதிகமாக உருமாற்றம் அடையுமா என்பதும் தெரியாது. அதிகமான உருமாற்றம் அடையும்போது, வைரஸ் எவ்வாறு செயல்படும் என்பதில் தாக்கம் ஏற்படும். 

 புதிய வகை வைரஸ் குறித்து விரிவான ஆலோசனை நடத்த உள்ளோம். அப்போது உலக அளவிலான விஞ்ஞானிகள் பங்கேற்று ஆலோசிக்கும்போது மேலும் கூடுதல் விவரங்கள் கிடைக்கும். தற்போது இந்தப் புதிய வகை வைரஸைக் கண்காணித்து வருகிறோம்” என்றார். 


Next Story