ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக 100 நாட்களில் புதிய தடுப்பூசி - பைசர் அறிவிப்பு


ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக 100 நாட்களில் புதிய தடுப்பூசி - பைசர் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Nov 2021 4:33 PM GMT (Updated: 27 Nov 2021 4:33 PM GMT)

தற்போதுள்ள எங்கள் தடுப்பூசியில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் தப்பிக்குமா? என தெரியவில்லை என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வீரியமிக்க ஒமிக்ரான் ரக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என சொல்லப்படுகிறது. 

உலக சுகாதார அமைப்பும் இந்த வகை கொரோனாவை கவலைக்குரிய திரிபாக வரிசைப்படுத்தியுள்ளது.  தென் ஆப்பிரிக்காவை தவிர்த்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது. இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதித்து இருக்கிறது.

ஒமிக்ரான் வைரஸ் அச்சத்தால் உலக நாடுகள் பல பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதேபோன்று இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதற்கிடையில், தற்போதுள்ள தடுப்பூசிகள் புதியவகை ஒமிக்ரான் ரக கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்குமா? என்பது குறித்து அந்தந்த தடுப்பூசி நிறுவனங்கள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், தற்போதுள்ள எங்கள் தடுப்பூசியில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் தப்பிக்குமா? என தெரியவில்லை என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பைசர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஒமிக்ரான் வைரஸ் தற்போதுள்ள எங்கள் தடுப்பூசியில் இருந்து தப்பிக்குமா? என எங்களுக்கு இதுவரை தெரியவில்லை. ஆனால், இந்த ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக 100 நாட்களில் புதிய கொரோனா தடுப்பூசியை தயாரித்து அனுப்புவோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story